ஏக்கம் - ஏமாற்றம் தயரதன் சடாயுவிடம் முன்னர் 'நீ உடல் தான் ஆவி' (2712) என்று கூறியதை நினைவிற் கொள்வதால் சடாயுவுக்கு ஏற்பட்ட ஏமாற்றத்தை இது குறிக்கும். உறக்கம் - சாவு எனலுமாம். பின்வரும் பாடல் இதைக் காட்டும் (2709). 19 2709. | தழுவினர், எடுத்தனர், தடக் கையால்; முகம் கழுவினர் இருவரும், கண்ணின் நீரினால்; வழுவிய இன் உயிர் வந்த மன்னனும், அழிவுறு நெஞ்சினன், அரற்றினான்அரோ. | இருவரும் - இராமலக்குவராம் இருவரும்; தடக்கையால் தழுவினர் எடுத்தனர் - பெரிய கைகளால் தழுவி எடுத்தவர்களாய்; கண்ணின் நீரினால் முகம் கழுவினர் - கண்ணீரால் சடாயுவின் முகத்தைக் கழுவினார்கள்; வழுவிய இன்உயிர் வந்த மன்னனும் - நீங்கியது எனக் கருதப் பெற்ற இனிய உயிர் திரும்பவும் வரப் பெற்ற கழுகரசனும்; அழிவுறு நெஞ்சினன் அரற்றினான் - மனம் அழிந்தவனாய்ப் பின்வருமாறு வாய்விட்டுப் புலம்பினான்; அரோ - ஈற்றசை. தயரதனின் மரணத்தைக் கேட்ட சடாயு உணர்வு நீங்கினார். அவரைத் தழுவி எடுத்துத் தம் கண்ணீரால் நீராட்டினர் இராமலக்குவர். அவர் அவ்வாறு ஆவன செய்ததால் சடாயுவுக்கு மூர்ச்சை தெளிந்து உணர்வு வந்தது. தம் நண்பன் இறந்த துன்பம் பெருக அவர் புலம்பலானார். தடக்கை - முழந்தாள் அளவு நீண்டகை, கண்ணீராற் கழுவுதல், பரதன் வசிட்ட முனிவனோடு தயரதனின் உருவைக் கண்டழுத நிலையில் 'கண்ண நீரினால் கழுவி ஆட்டினான்' என்ற நிலையோடு ஒப்பிடற் குரியது (2225). 20 அறுசீர் ஆசிரிய விருத்தம் 2710. | 'பரவல் அருங்கொடைக்கும், நின்தன் பனிக்குடைக்கும், பொறைக்கும், நெடும் பண்பு தோற்ற கரவல் அருங் கற்பகமும், உடுபதியும், கடல் இடமும், களித்து வாழ- புரவலர்தம் புரவலனே! பொய்ப் பகையே! மெய்க்கு அணியே! புகழின் வாழ்வே!- இரவலரும், நல் அறமும், யானும், இனி என் பட நீத்து ஏகினாயே? |
புரவலர் தம் புரவலனே - மன்னர்க்கெல்லாம் மன்னனே!, பொய்ப் பகையே - பொய்க்குப் பகைவனே!; மெய்க்கு அணியே - உண்மைக்கு அணிகலம் ஆனவனே!; புகழின் வாழ்வே - புகழுக்கு வாழ்விடமாய் இருப்பவனே!; நின்தன்பரவல் அரும் கொடைக்கும் - உன்னுடைய புகழ்வதற்குரிய ஈகைக்கும்; பனிக்குடைக்கும் - குளிர்ந்த வெண் கொற்றக் |