சம்பரனை அழித்த செய்தி, பாலகாண்டத்தில் விசுவாமித்திரன் புகழுரையில் 'சம்பரனைக் குலத்தோடும் தொலைத்து நீ கொண்டு அன்று அளித்த அரசு அன்றோ புரந்தரன் இன்று ஆள்கின்றது (322) என்ற தொடராக வெளிப்படும். அப்போது சடாயு தயரதனுக்கு உதவியதால் 'நீ உடல் நான் ஆவி' எனக் கூறினான். அதை எண்ணிய சடாயு, உலகில் யமன் உயிரைக் கொண்டு உடலை விட்டுச் செல்லும் இயல்புக்கு மாறாக உயிரை விட்டு விட்டு உடம்பாம் தயரதனைக் கொண்டு சென்றதை எண்ணி வருந்துகிறார். யமனின் அறிவற்ற செயலை எண்ணி உணர்வு இறந்த கூற்றினார் என்றார். கூற்றினார் என்பது யமனின் இழிந்த செயலை எண்ணி இகழ்ந்த எள்ளல் வெளிப்படும். உலகுக்குத் தயிரும் சம்பரனுக்கு மத்தும் உவமை. இதனைச் சிந்தாமணியுள் 'ஆயர் மத்தெறி தயிரினாயினார்' என்பதுடன் (சீவக. 421) ஒப்பிடலாம். "உணர்வு இறந்த கூற்றினார்' என்ற தொடரை உயிர் கிடக்க உடலை விசும்பு ஏற்றினார் என்ற தொடர் சமர்த்தித்து நின்றதால் இது தொடர்நிலைச் செய்யுட் குறியணி. 23 | 2713. | 'எழுவது ஓர் இசை பெருக, இப்பொழுதே, ஒப்பு அரிய எரியும் தீயில் விழுவதே நிற்க, மட மெல்லியலார்- தம்மைப்போல் நிலத்தின்மேல் வீழ்ந்து அழுவதே யான்?' என்னா, அறிவுற்றான் என எழுந்து, ஆங்கு அவரை நோக்கி, 'முழுவது ஏழ் உலகு உடைய மைந்தன்மீர்! கேண்மின்' என முறையின் சொல்வான்: | எழுவது ஓர் இசை பெருக - உண்டாகும் ஒப்பற்ற புகழ் வளர்ந்தோங்கும்படி; இப்பொழுதே ஒப்பு அரிய எரியும் தீயில் விழுவதே நிற்க - தயரதன் மறைவைக் கேட்ட இக்கணமே ஒப்புரைக்க முடியாத சுடர் விட்டு எரியும் நெருப்பில் வீழ்ந்து மடியும் செயலைச் செய்யாமல் விட்டு; மடமெல்லியலார் தம்மைப் போல் - பேதமைப் பெண்களைப் போல; நிலத்தின்மேல் வீழ்ந்து யான் அழுவதே என்னா - பூமியின் மேல் விழுந்து அழுவது தகுமோ? என்று; அறிவுற்றான் என எழுந்து - மூர்ச்சை தெளிந்து அறிவு பெற்றவன் போல் எழுந்திருந்து; ஆங்கு அவரை நோக்கி - அப்பொழுது இராமலக்குவரைப் பார்த்து; முழுவது ஏழ் உலகு உடைய மைந்தன்மீர் கேண்மின் - ஏழு உலகங்கள் முழுதையும் உடைமைப் பொருளாகக் கொண்ட மக்களே! கேளுங்கள்; என முறையின் சொல்வான் - என்று முறையாகச் சடாயு கூறுவார். கணவன் இறந்த காலத்தில் பெண் நிலத்தின் மேல் வீழ்ந்து அழுதல் இயற்கை. அவ்வாறு அழுவதை விட்டு எரியில் புகும் உயர்ந்த மகளிர் போலத் தீயில் புகுவதே தான் செய்யத்தகுந்தது எனச் சடாயு கருதினார். 'பசைந்தாரின் தீர்தலின் தீப்புகுதல் நன்று' என்ற நான்மணிக் கடிகையின் (நான்மணி 13) கருத்து இங்குக் கருதத்தக்கது. 'முழுவதேழுலகுடையான் மைந்தன்மீர்' எனக் கொண்டு ஏழு உலகங்களையும் தன்னடிக் கீழ்க் கொண்ட தயரதனின் மக்களே என்றும் பொருள் உரைப்பர். இனிச் சடாயு எரியில் வீழ |