மெய்காத்தான். களைகண் - கொடிகள் வளர்ந்து படர ஊன்றப் பெறும் கொம்பு. 'ஆருளர் களை கணம்மா அரங்கமா நகருளானே' (திருமாலை.29) என்ற தொடர் இதனுடன் ஒப்பிடற் குரியது. இக்கொடிய வனத்தில், நீங்கள் களைகணாய் உதவாவிடில் வேறு ஆதரவு எங்களுக்கு இல்லை' என இராமலக்குவர் சடாயுவிடம் அவர் உளங் கொளக் கூறினர். கைவிடுதல் - துன்ப வேளையில் உதவாமல் விட்டு நீங்குதல். பெருமாஅன் - விளியின் பொருட்டு வந்த அளபெடை. 28 2718. | "தாயின், நீங்க அருந் தந்தையின், தண் நகர் வாயின், நீங்கி, வனம் புகுந்து, எய்திய நோயின் நீங்கினெம் நுன்னின்" என் எங்களை நீயும் நீங்குதியோ?- நெறி நீங்கலாய்!" | நெறி நீங்கலாய் - அறநெறியிலிருந்து நீங்காதவரே!; நீங்க அரும் தாயின் தந்தையின் - ஒரு போதும் நீங்காத தாயை விட்டும் தந்தையை விட்டும்; தண்நகர் வாயின் நீங்கி - குளிர்ந்த நீர் வளம் கொண்ட அயோத்தி நகரின் கோட்டை வாயிலை விட்டும் நீங்கி; வனம் புகுந்து எய்திய நோயின் நுன்னின் நீங்கினெம் - காட்டிற்கு வந்தடைந்த துன்பத்திலிருந்து உங்களை அடைந்ததால் நீங்கினோம்; என் எங்களை நீயும் நீங்குதியோ - இந்நிலையில் எங்களை விட்டு நீங்களும் இறந்து போவீர்களா? (இறத்தல் கூடாது என்றபடி). தாயையும் தந்தையையும் விட்டுப் பிரிந்தும் அயோத்தி நகரை விட்டு நீங்கியும் காட்டை அடைந்து இராமலக்குவர் துன்பம் எய்தினர். அத்துன்பம் சடாயுவைக் கண்டு நீங்கிய நிலையில் என்ன செய்ய இயலும் எனக் கேட்டு அவர்கள் சடாயுவைத் தீப் புகுவதிலிருந்து தடுத்தனர். நீங்க அரும் என்பதைத் தாய், தந்தை ஆகிய இரு சொற்களின் முன்னரும் கூட்டுவதால் மத்திம தீபம். நுன் - உன் கன்னட நாட்டுத் திசைச்சொல் என்பார் நச்சினார்க்கினியர் (சீவக. 324). நீயும் - உயர்வுச் சிறப்பும்மை இறந்தது தழுவிய எச்ச உம்மை எனவும் கொள்வர். தாயின் தந்தையின், வாயின், நுன்னின் - இவற்றில் உள்ள இன் உருபு நீக்கப்படு பொருளாயும் எல்லைப் பொருளாயும் கொள்ளப் பெறும். 29 2719. | என்று சொல்ல, இருந்து அழி நெஞ்சினன், நின்ற வீரரை நோக்கி நினைந்தவன், "அன்று அது" என்னின், அயோத்தியின், ஐயன்மீர் | |