உள்ளத்து உறைகுவான் - எல்லா உயிர்களின் மனத்தில் தங்கியுள்ள இராமன்; (சடாயுவைப் பார்த்து) இறைவ அகத்தியன் எண்ணி ஈந்துளது - தலைவனே! அகத்திய முனிவர் நாங்கள் தங்கற்கு உரிய இடம் என ஆலோசித்துக் கூறியருளியதாகிய; அறையும் நல்மணி ஆற்றின் அகன் கரைத் துறையுள் ஒரு சூழல் உண்டு - ஒலிக்கின்ற சிறந்த அழகிய கோதாவரி ஆற்றின் அகன்ற கரையின் நீர்த்துறை இடத்தில் ஓர் இடம் உள்ளது; அச்சூழல் புக்கு உறைதும் என்றனன் - அந்த இடத்தை அடைந்து வாழ்வோம் என்று கூறினான். உள்ளத்து உறைகுவன் என்ற கருத்து விளங்க அயோத்தியா காண்டக் கடவுள் வாழ்த்துப் பாடலில் (1313) 'உள்ளும் புறத்தும் உளன்' என்று கூறுவார், சடாயு கழுகுகளுக்கு அரசன் ஆதலாலும் தங்களுக்குத் தந்தை முறை ஆதலாலும் 'இறைவ' என விளித்தான் இராமன். 'அறையும் நல்மணி ஆறு' என்பதற்குச் சிறப்பித்துக் கூறுகின்ற நல்ல முத்துப் போலத் தெளிந்த நீருள்ள ஆறு என்றுமாம். இவ்வாற்றின் கரையிலுள்ள இடம் அகத்திய முனிவர் கூறிய பஞ்சவடியாம். சடாயுவின் விருப்பை மறுத்தற்குத் தக்க காரணமாக அகத்திய முனிவரின் கருத்துப் படி தான் பஞ்சவடி செல்வதை இராமன் பணிவுடன் கூறுகிறான். இதனால் சடாயுவும் தான் பஞ்சவடி செல்வதை ஒப்புக் கொள்வார் என்பது குறிப்பு. 39 சடாயு வழி காட்ட பஞ்சவடியை அடைதல் 2729. | 'பெரிதும் நன்று; அப் பெருந் துறை வைகி, நீர் புரிதிர் மா தவம்; போதுமின்; யான் அது தெரிவுறுத்துவென்' என்று, அவர், திண் சிறை விரியும் நிழலில் செல்ல, விண் சென்றனன். | (அது கேட்ட சடாயு) பெரிதும் நன்று - (அகத்தியர் கூற்றுப்படி அங்குச் சென்று தங்குவது) மிகவும் நன்மை தரத்தக்கது; அப்பெருந்துறை வைகி நீர் மாதவம் புரிதிர் போதுமின் என்று - அந்தப் பெரிய ஆற்றின் துறையிடத்துத் தங்கி நீங்கள் சிறந்த தவத்தைப் புரிவீர்களாக வாருங்கள்; யான் அது தெரிவுறுத்துவென் - யான் அவ்விடத்தை உங்களுக்குக் காட்டுவேன் என்று கூறி; திண் சிறை விரியும் நிழலில் அவர் செல்ல விண் சென்றனன் - தன் வலிய சிறகுகளின் பரந்த நிழலின் கீழ் அவர்கள் நடந்து வரும்படி வானில் பறந்து சென்றார். 'பெரிதும் நன்று' என்பது உலக நன்மை தோன்ற இராவண வதத்தைக் குறிப்பால் உணர்த்தி நிற்கிறது. சடாயு வாயிலாக அதற்குத் தோற்றுவாய் எழுந்தது எனலாம். இனிப் பெரிது நன்று அப்பெருந்துறை என ஆற்றின் பெருமையை உரைப்பாரும் உளர். 'புனை சடை முடியின'ராகச் சடாயு |