பக்கம் எண் :

144ஆரணிய காண்டம்

துளிகள் எங்கும் பரவி வழிய; அழுவது ஒத்தது - புலம்பி அழுவதைப்
போன்றிருந்தது; ஆல், மன், ஓ - என்பன அசைகள்.

     அலங்குதல் - அசைந்தாடுதல் வழுஇலா வாய்மை என்பது
தண்டகாரணிய முனிவர்களுக்கு, அவர்களை அரக்கரின் கொடுமையிலிருந்து
விடுவிக்கக் கூறிய மொழிகளை நிறை வேற்ற நிற்பவர் எனலாம். மேலும்,
தம் தந்தை கைகேயிக்குக் கொடுத்த வரத்தின் மெய்ம்மையைக்காக்க
வனம்புகுந்த மைந்தர் எனலும் பொருந்தும் கண்ணுக்குக் குவளை; முந்திய
பாடலில் (2733) 'குவளை ஒண் கண்' எனக் கூறியதை நோக்குக. கண்பனி -
கண்ணீர். பழுவம் என்பது காடு. இது ஆகுபெயராய்த் தொகுதியை
உணர்த்திற்று. குவளைக்காடு எனலுமாம். பின்னர் 'எல்லி அம் குவளைக்
கானத்து' (2737) எனவும் வருதல் காண்க. குவளை மலரில் தோன்றும் தேன்
வழிவதைக் கண்ணீர் (கள்+நீர்) வடிப்பதாகக் கொள்வாரும் உளர்.
கோதாவரியைச் சேர்ந்த காலம் பனிக்காலத்திற்குச் சற்று முந்தியது.
ஆதலால் பனி என்பதற்கு பனி நீர்த்துளி எனவும் கூறுவர்.

     இரைத்து இரைத்து, ஏங்கி ஏங்கி எனும் அடுக்குகள் மிகுதி குறித்து
நின்றன. உருவகமும், தற்குறிப்பேற்ற அணியும் இப்பாடலில்
அமைந்துள்ளன.                                               3

இராமனும் சீதையும் இயற்கைக் காட்சிகளைக் கண்டு மகிழ்தல்

2735.நாளம்கொள் நளினப் பள்ளி,
     நயனங்கள் அமைய, நேமி
வாளங்கள் உறைவ கண்டு,
     மங்கைதன் கொங்கை நோக்கும்,
நீளம்கொள் நிலையோன்; மற்றை
     நேரிழை, நெடியநம்பி
தோளின்கண் நயனம் வைத்தாள்,
     சுடர்மணித் தடங்கள் கண்டாள்.

    நீளம் கொள் சிலையோன் - நீண்ட வில்லை உடைய இராமன்;
நாளம் கொள் நளினப் பள்ளி - தண்டினைக் கொண்ட தாமரை மலராகிய
படுக்கையில்; நயனங்கள் அமைய நேமி வாளங்கள் உறைவ கண்டு -
கண்கள் மூடியிருக்கச் சக்கரவாகப் பறவைகள் தங்கியிருப்பதைப் பார்த்து;
மங்கை தன் கொங்கை நோக்கும் - சீதையின் மார்பகங்களைப்
பார்த்தான்; நேரிழை நெடியநம்பி தோளின்கண் நயனம் வைத்தாள் -
தக்க அணிகலன்களை அணிந்த சீதை பெரியோனும் ஆண்களிற்
சிறந்தவனுமான் இராமனின் தோளினைப் பார்த்தாள்; சுடர்மணித் தடங்கள்
கண்டாள் -
ஒளிவீசும் நீலமணியால் ஆகிய குன்றுகளை நோக்கினாள்;
மற்று - வினை மாற்றுப் பொருளில் வந்து; ஐ - சாரியை.