நாளம் - உட்துளை கொண்ட தண்டு. நேமி வாளம் - சக்கர வாகம் எனும் நீர்வாழ் பறவை. இது வட்டமாய்க் குவிந்துயர்ந்த வடிவு கொண்டது. எனவே தாமரை மலரில் இப்பறவைகளைப் பார்த்ததும் சீதையின் கொங்கை வடிவை இராமன் கண்டான். பம்பைப் பொய்கையை வருணிக்கும் போது 'மங்கைமார் தடமுலை எனப் பொலிவன வாளம்' (3728) என்பர். சீதை இராமனின் தோள்களைக் கண்டு அவற்றைப் போன்று ஆற்றின் கண் உள்ள மணற்குன்றுகள் இருப்பதை எண்ணினாள். இராமன் புறப்பொருளினைக் காணும் போது தன் துணைவியையும் இராமனின் தோள் அழகைக் காணும் போது சீதைக்குப் புறத்தே உள்ள மணற்குன்றின் அமைப்பையும் உவமையாகக் காணும் நிலை புலப்படுகின்றது. புறக்காட்சியில் அகநிலையும் அகக் காட்சியில் புறநிலையும் காண்பதில் முறையே இராமன் சீதை ஆகியோரின் அன்புள்ளம் தெரிகிறது. மணித்தடம் - அழகிய கரை எனலுமாம். நெடியோனாய் உலகளந்த திருமாலை நினைப்பூட்டும் 'நெடிய நம்பி' எனும் தொடர் தயரதனின் மூத்த மகன் எனலுமாம். மகளிர்க்குக் கொங்கையும் ஆடவர்க்குத் தோளும் சிறந்த உறுப்புகளாதலால் அவற்றை இங்கே ஒருங்கே காண்கிறோம். நேரிழை என்பது அத்திரி முனிவனின் மனைவி அனுசுயை கொடுத்த அணிகலன்களை நினைவூட்டும். சக்கரவாகம் என்ற சொல் சக்கரவாளம் என ஆயிற்று. சக்கரம் என்பதை நேமி என்ற சொல்லால் சுட்டினார். நேரிழை - அன் மொழித் தொகை. ஒரு பொருளைக் கண்டு ஒப்புமையால் மற்றொரு பொருளை நினைப்பது கூறியதால் இது நினைப்பணி. 4 2736. | ஓதிமம் ஒதுங்க, கண்ட உத்தமன், உழையள் ஆகும் சீதை தன் நடையை நோக்கி, சிறியது ஓர் முறுவல் செய்தான்; மாது அவள் தானும், ஆண்டு வந்து, நீர் உண்டு, மீளும் போதகம் நடப்ப நோக்கி, புதியது ஓர் முறுவல் பூத்தாள். |
ஓதிமம் ஒதுங்கக் கண்ட உத்தமன் - அன்னப் பறவை நடந்து செல்லக் கண்ட மேலானவனான இராமன்; சீதை தன் நடையை நோக்கி சிறியது ஓர் முறுவல் செய்தான் - சீதையின் நடையைப் பார்த்து ஒரு புன் சிரிப்புக் கொண்டவனானான்; ஆண்டுவந்து நீர் உண்டு மீளும் போதகம் நடப்ப நோக்கி - அங்கு வந்து நீரைப் பருகி மீளுகின்ற ஆண்யானை நடந்து செல்வதைப் பார்த்து; மாது அவள் தானும் புதியது ஓர் முறுவல் பூத்தாள் - அச்சீதையும் அதுவரை இல்லாத ஒரு தனிப் புன்னகை பூண்டாள். உண்ணல் என்பது உண்பன, தின்பன, பருகுவன, நக்குவன என்ற சிறப்பு வினைகளைக் கூறாது இங்கு பொது வினையைக் குறித்தது என்பர். |