| | வசை இல் மேரு முதல் மால் வரைகள் ஏழின் வலி சால் விசைய வார் சிலை இராமன் ஒரு வாளி விடவே |
அன்ன அயில் - அந்தச் சூலப்படை; திசையும் - எண் திசைகளும்; வானவரும் - அவ்வெட்டுத்திசைக்காவல் செய் தேவரும்; திசைநின்ற மாவும் - அத்திக்குகளில் நின்ற எட்டுயானைகளும்; உலகும் - உலகங்களும்; அசையும் - கலங்கக் காரணமான; ஆலம் என- ஒரு நஞ்சென; மின்னிவரலும் - ஒளிவீசி வரவும்; இராமன், வசையில் மேரு முதல்மால் வரைகள் ஏழின் வலி சால் - குற்றமில்லாத மேரு முதலாக உள்ள மலைகள் ஏழை விட வலிமைமிக்க; விசைய வார்சிலை - வெற்றித் தரும் நீண்ட வில்லிலிருந்து; ஒருவாளி விட -ஓரம்பைத் தொடுத்து எய்ய: ஏ - ஈற்றசை. திசையும் வானவரும் என்பதற்குத் திகைக்கும் தேவரும் எனவும் பொருள்படும். எ.டு. ‘நீதிசைத்தது உண்டோ’ (1512) திசைவானவர் - இந்திரன், அக்கினி, யமன், நிருதி, வருணன், வாயு,குபேரன், ஈசானன் என எண்மர். எட்டுத்திக்கு யானைகள் ஐராவதம், புண்டரீகம், வாமனம், குமுதம், அஞ்சனம், புட்பதந்தம், சாருவபௌமம், சுப்பிரதீபம் என்பன. மா - விலங்கின் பொதுப் பெயர்.ஏழுமலைகளாவன: கயிலை, இமயம், மந்தரம், விந்தம், நிடதம், எமகூடம், நீலகிரி என்பன.விசயம் என்பது விசையம் என எதுகை நோக்கித் திரிந்தது எனலாம். விசைய என்பதற்கு வேகமாகஎனவும் பொருள் கூறுவர். ஒரு - ஒப்பற்ற எனவுமாம். 26 | 2543. | ‘இற்றது இன்றொடு இவ் அரக்கர் குலம்’ என்று, பகலே, வெற்ற விண்ணினிடைநின்று நெடு மீன் விழுவபோல், சுற்று அமைந்த சுடர் எஃகம்அது இரண்டு துணியா அற்ற கண்டம்அவை ஆசையினது அந்தம் உறவே |
இவ்வரக்கர் குலம் இன்றொடு இற்றது - இந்த இராக்கதக் கூட்டம் இந்த நாளோடு முடிந்தது; என்று - எனக் குறிபார்த்து; பகலேவெற்ற விண்ணினிடை நின்று நெடு மீன் விழுவ போல் - பகற்காலத்திலே வேகமற்ற வெறும்வானத்திலிருந்து பெரிய விண்மீன்கள் வீழ்வன போல; சுற்று அமைந்த சுடர் எஃகம் அது - சுற்றிலும் பொருந்திய ஒளியுடைய சூலம்; இரண்டு துணியா - இரண்டு துண்டாக்கப்பட்டு; அற்ற கண்டம் அவை - அழிந்த அத்துண்டங்கள்; ஆசையினது அந்தம் உற - திக்குகளின்எல்லையை அடைய; ஏ - ஈற்றசை. |