பக்கம் எண் :

184ஆரணிய காண்டம்

நீயோ இக்காட்டில் தனியனாக உள்ளாய்; ஆதலால் மற்று அவரொடும்
தழுவற்கு ஒத்த வினையம் ஈது அல்லது இல்லை -
ஆகையால் அந்த
அரக்கரோடு நட்புடன் வாழ்வதற்குரிய தந்திரம் இது அல்லாமல் வேறு
இல்லை; (காந்தர்வ மணம் செய்து கொண்டால்) விண்ணும் நின் ஆட்சி
ஆக்கி -
தேவருலகையும் உன் அரசாட்சிக் கீழ் அமைத்து; இனியர் ஆய்-
இனிய அன்பு உன்பால் உடையவர்களாய்; அன்னர் வந்து உன்
ஏவலின் நிற்பர் என்றாள் -
அத்தகையோர் உன்னிடம் வந்து நீ இட்ட
கட்டளைப்படி நடப்பர் எனச் சூர்ப்பணகை சொன்னாள்.

     தவவேடம் பூண்ட இராமனிடம் இராவணன் முனிவர்களிடம் கொண்ட
பகையை முதலில் கூறி அவனோடு நட்பாம் வழி தன்னைக் காந்தர்வ
மணம் முடிப்பதே என உரைத்தாள். மேலும், தன்னை மணப்பதால்
விண்ணரசு செய்யலாம் என ஆசை ஊட்டுகிறாள். அத்துடன் அன்றி
அரக்கரும் இராமன் ஏவல்படி நிற்பர் என வாழ்வில் ஓர் உயர் நிலை
உறுவதையும் சுட்டுகிறாள் இவற்றை ஆக்கிக் கொள்ளும் வினையமாகத்
தன்னை மணந்து கொள்வதே எனச் சுட்டாமல் சுட்டுவாள். வினையம் -
செயல் என்பாருமுளர். விண்ணும் என்பதில் உள்ள எச்ச உம்மையால்
மண்ணும் எனக் கொள்ள இடமுள்ளது. விண்ணும் என்பதைச்
சிறப்பும்மையாகவும் கூறுவர்.                                   55

2787.'நிருதர்தம் அருளும் பெற்றேன்; நின்
     நலம் பெற்றேன்; நின்னோடு
ஒருவ அருஞ் செல்வத்து யாண்டும் உறையவும்
     பெற்றேன்; ஒன்றோ,
திரு நகர் தீர்ந்த பின்னர், செய்
     தவம் பயந்தது?' என்னா,
வரி சிலை வடித்த தோளான் வாள்
     எயிறு இலங்க நக்கான்.

    வரிசிலை வடித்த தோளான் - (சூர்ப்பணகை கூறிய மொழிகளைக்
கேட்டபின்) கட்டுக்கள் அமைந்த வில் தொழில் பயின்ற தோளை உடைய
இராமன்; நிருதர் தம் அருளும் பெற்றேன் - அரக்கர்களின் அருளையும்
அடைந்தேன்; நின் நலம் பெற்றேன் - உன்னை அடையும் நன்மையும்
அடைந்தேன்; நின்னொடு ஒருவ அருஞ் செல்வத்து யாண்டும்
உறையவும் பெற்றேன் -
உன்னோடு எக்காலத்தும் நீங்காத பெரும்
செல்வத்தை நீங்காது எப்போதும் நிலைத்திருக்கவும் அடைந்தேன்; ஒன்றோ
-
இது மட்டுமா?; திருநகர் தீர்ந்த பின்னர் செய்தவம் பயந்தது -
அழகிய அயோத்தியை நான் நீங்கிய பிறகு நான் செய்த தவத்தின் பயனாய்
விளைந்தது போலும்; என்னா வாள் எயிறு இலங்க நக்கான் - என்று
சொல்லி ஒளியுள்ள தன் பற்கள் புலப்படச் சிரித்தான்.

     நலம் - அழகும் ஆம். 'சிலைவடிப்ப வீங்கி விரையெனத் திரண்ட தோளான்' என்ற சீவக சிந்தாமணித் (1450) தொடருக்கு நச்சினார்க்கினியர்