பக்கம் எண் :

192ஆரணிய காண்டம்

மூங்கில் பின்னிடும் படி அழகிய தோள்களையும் உடைய சீதை; வீரனைச்
சேரும் வேலை -
வீரனாம் இராமனை அணுகும் போது; நிருதர்
தம்பாவை நீ இடை வந்தது என்னை -
அரக்கர் பெண்ணே! எங்களுக்கு
இடையில் நீ குறுக்கிட்டது ஏன்; என்னா காய் எரி அனைய கள்ள
உள்ளத்தாள் கதித்தலோடும் -
என்று கூறிப் பற்றி எரியும் தீப் போன்ற
வஞ்சக எண்ணத்தாளாம் சூர்ப்பணகை சினந்து வேகமாக வந்ததும்.

     அமுதின் வந்த - திருப்பாற் கடலில் அமுதத்துடன் தோன்றிய
(திருமகளாம் சீதை) எனவும் ஆம். அமுதின் வந்த அம் சொல் எனக்
கூட்டுவாரும் உளர். கிட்கிந்தா காண்டத்தில் தாரையைப் பற்றிக்
கூறும்போது 'ஆயிடை, தாரை என்று அமிழ்தின் தோன்றிய வேயிடைத்
தோளினாள்' (3956) என்பார். அதனை இங்கு ஒப்பிடற் பாலது 'அருந்ததிக்
கற்பு' என இங்குக் கூறியது போன்றே வனம் புகு படலத்தில் இராமன்
சீதையை அருந்ததி அனையாளே' (2006) என விளிப்பான். வேலை -
சமயம், பொழுது, காலம். கதித்தல் - விரைந்து செல்லல். சீதையை அமுது
என்பதால் சூர்ப்பணகை தீய நஞ்சாகிறாள். இரண்டும் முரண்பட இங்கு
அமையும் நாடகப் பாங்கு சுவைத்தற்குரியது.

     ஆயிடை - அகரச் சுட்டு செய்யுள் விகாரமாய் நீண்டது. பாவை -
அண்மை விளி இது இயல்பாய் நின்றது.                           65

2797. அஞ்சினள்; அஞ்சி அன்னம், மின்
     இடை அலச ஓடி,
பஞ்சின் மெல் அடிகள் நோவப்
     பதைத்தனள்; பருவக் கால
மஞ்சிடை வயங்கித் தோன்றும்
     பவளத்தின் வல்லி என்ன,
குஞ்சரம் அனைய வீரன் குவவுத்
     தோள் தழுவிக் கொண்டாள்.

    அஞ்சினள் - (சூர்ப்பணகை அருகே வரக்கண்டு) அச்சமுற்றவளாம்
சீதை; அஞ்சி அன்னம் மின் இடை அலச ஓடி - அச்சுற்று அன்னப்
பறவை தன் மின்னல் போன்ற இடை தள்ளாட ஓடிச் சென்று; பஞ்சின்
மெல் அடிகள் நோவப் பதைத்தனள் -
பஞ்சுபோலும் மென்மையான
பாதங்கள் வருத்தத் துடித்தவளாய்; பருவக்கால மஞ்சிடை வயங்கித்
தோன்றும் பவளத்தின் வல்லி என்ன -
கார் காலத்தில் தோன்றும் கரிய
மேகத்திடையே தோன்றும் சிவந்த பவளக்கொடி போல; குஞ்சரம் அனைய
வீரன் குவவுத் தோள் -
யானை போன்ற வீரனாம் இராமனின் திரண்ட
தோள்களை; தழுவிக் கொண்டாள் - அணைத்துக் கொண்டாள்.

     இடைக்கு மின்னல் உவமையாம் நுட்பமும் ஒளி வீசும் தன்மையாலும்
ஒப்பாம். அலசல் - தள்ளாடுதல் மந்திரப் படலத்தில் இராமனை வேண்டும்
தயரதன் 'ஐய! சாலவும் அலசினென்' (1374) என்பான் இப்பொருள்பட
இராமனுக்குக் கார் கால மேகமும் சீதைக்குப் பவள வல்லியும் ஒப்பாம்.