தன் ஆணோடு சேர்ந்து தங்கும் சிவந்த தலையையுடைய அன்றில் பறவையின் (மகிழ்ந்த) நாவின் குரலால்; வலி எஞ்ச நடுங்குவாள் - தன் பலம் குறைய அஞ்சி நடுக்கம் கொண்டாள் (சூர்ப்பணகை) பூவெலாம் பொடியாக நினைப்பதற்குக் காரணம் மன்மதன் பூக்களாம் அம்புகளைக் கொண்டு தன்னை வருத்துவதால் அவை இல்லாமல் செய்ய எண்ணினாள். உலகில் பூக்களை இல்லாமல் செய்ய அவை மலரும் சோலைகளையே இல்லாமல் அழிக்க முனைகிறாள். சோலையாம் காரணத்தை அழித்தால் காரியமாம் பூக்கள் மலர்ந்து தனக்குத் துன்பம் செய்யா என எண்ணும் எண்ணம் இதில் வெளிப்படுகிறது. இங்குச் 'செந்தலை அன்றில்' என்றுரைப்பதற்கேற்பக் குறுந்தொகையும் (160) 'நெருப்பினன்ன செந்தலை அன்றில்' எனக் குறிக்கும். அன்றில் பறவை எப்போதும் ஆணும் பெண்ணும் கூடியே இருக்கும். பிரிவு நேரில் சில முறை கூவித் தன் துணையை அழைக்கும். அப்போதும் அது வராவிடில் வாழாது என்பர். வட மொழியில் இப்பறவையைக் 'கிரௌவுஞ்சம்' என்பர். மிதிலைக் காட்சிப் படலத்தில் மாலை வரச் சீதை வருந்திப் புலம்பும் போது 'அன்றில் ஆகி வந்தாயோ?' என்பாள் (547). உண்டாட்டுப் படலத்திலும் ஒரு பெண் எனக்கு அன்றிலோடு ஒத்தி என்று அழுது சீறினாள்' என வரும் (989) 76 | 2808. | 'அணைவு இல் திங்களை நுங்க, அராவினைக் கொணர்வென், ஓடி' எனக் கொதித்து உன்னுவாள்; பணை இன் மென் முலைமேல் பனி மாருதம் புணர, ஆர் உயிர் வெந்து புழுங்குமால். |
அணைவு இல் திங்களை நுங்க - தனக்கு இணக்கமாக இல்லாத சந்திரனை விழுங்க; அராவினை ஓடிக் கொணர்வென் எனக் கொதித்து உன்னுவாள் - இராகு கேது எனும் பாம்புகளை ஓடிச் சென்று கொண்டுவருவேன் என்று கோபத்தால் கொதிப்படைந்து எண்ணுவாள்; (ஆனால்) பணை இன் மென் முலை மேல் பனிமாருதம் புணர - தனது பருமையும் இனிமையும் மென்மையும் கொண்ட கொங்கைகள் மீது குளிர்ந்த காற்று வீசிப்படிய; ஆர் உயிர் வெந்து புழுங்கும் - தன் அரிய உயிர் காமச் சூட்டால் வெந்து வருந்துவாள் (சூர்ப்பணகை); ஆல் - அசை. கலவியிற் கூடினவர்க்கு இன்பமூட்டும் சந்திரன் காமத்தால் வருந்துவோர்க்குத் துன்பம் செய்வான். அதற்கு அவனை விழுங்கும் இராகு கேது எனும் கரும்பாம்பு செம்பாம்புகளைப் பற்றிக் கொணர்ந்தால் அவை சந்திரனை விழுங்கி விடத் தனக்குத் துன்பம் நேராது எனச் சூர்ப்பணகை |