பக்கம் எண் :

204ஆரணிய காண்டம்

    அன்ன காலை அழல் மிகு தென்றலும் - அச்சமயத்தில் வெப்பம்
மிக்க தென்றல் காற்றும்; முன்னின் மும்மடி ஆய் -
முன்புவருத்தியதைவிட மூன்று மடங்கு மிகுதியாய் (வருத்த); முலை வெந்து
உக -
கொங்கைகள் வெப்பமுற்று அனல் சொரிய; இன்னவா செய்வது
என்று அறியாது -
இன்ன வகையாகச் செய்வேன் என்று தெரியாமல்;
இளம் பொன்னின் வார் தளிரில் புரண்டாள் - இளமையும் பொன்
போன்ற நிறமும் கொண்ட தளிர்களின் மீது விழுந்து புரண்டாள்; அரோ -
அசை.

     இளம் பொன்னின் வார் தளிரில் புரண்டாள் என்பது காமத் தீயில்
வருந்தும் பெண்களைத் தளிர்ப்படுக்கையில் கிடத்தி ஆற்றுவிக்கும்
நிலையைக் காட்டும். தோழிகள் தளிரைப் பரப்பித் தலைவி துயரைத்
தணிப்பர் இதனை மிதிலைக் காட்சிப் படலத்தில் சீதை பட்ட துன்பத்தைக்
கூறும்போது 'கரிந்தன பல்லவங்களே' (529) என்பர். மேலும் 'தாயரின் பரி
சேடியர் தாதுரு வீ, அரித்தளிர், மெல்லணை மேனியில் காய் எரிக் கரியக்
கரிய கொணர்ந்து ஆயிரத்தின் இரட்டி அடுக்கினர்' (560) என்பர் இங்குத்
தாதியரோ பிறரோ உதவாமல் தனக்குத் தானே சூர்ப்பணகை தளிர்களைப்
பரப்பி அவற்றில் புரண்டாள் என்பதாம். இவளுக்குத் தென்றலும்
பகையாயிற்று.                                               82

2814. வீரன் மேனி வெளிப்பட,
     வெய் யவள்,
கார் கொள் மேனியைக்
     கண்டனளாம் என,
சோரும்; வெள்கும்; துணுக்
     கெனும்; அவ் உருப்
பேருங்கால், வெம் பிணி
     யிடைப் பேருமால்.

    வீரன் மேனி வெளிப்பட - (அப்போது) இராமனின் திருமேனியின்
உரு வெளித்தோற்றம் எழ; வெய்யவள் கார்கொள் மேனியைக்
கண்டனளாம் என -
கொடிய அரக்கியாம் சூர்ப்பணகை கருமேகம்
போன்ற அவனது திருமேனியைக் கண்டவளே போல; சோரும் - சோர்வு
அடைவாள்; வெள்கும் - வெட்கமடைவாள்; துணுக் கெனும் - திடுக்கிட்டு
நடுங்குவாள்; அவ்வுருப் பேருங்கால் வெம் பிணியிடைப் பேரும் -
அந்த வடிவம் மறையும் போது கொடிய காம நோயில் மீண்டும்
அகப்படுவாள்; ஆல் - அசை.

     வெம்மை - கொடுமை. விருப்பம் எனக் கொண்டால் இராமன் மீது
விருப்பம் கொண்டவள் என ஆம். காமத்தால் உருவெளித் தோற்றம்
காண்பது காப்பியப் படைப்பின் இயல்பாம். மிதிலைக் காட்சிப் படலத்தில்
இராமன் சீதையின் உருவெளிப் பாட்டைக் கண்டு வருந்தியதைப் பல
பாடல்கள் விளக்கும் (619.630). பின்னர்ச் சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலத்தில்
சீதையின் உருவெளிப்பாடு தோன்றியதால் இராவணன் வருந்திக் கூறிய
கூற்றையும் விரித்துரைக்கும் (3208-3210). கார் கொள் என்பதில் கொள்
என்பது உவம வாசகம்.                                         83