ஆகிய மருந்தினால்; அவ் ஏழை ஆவி இறந்திலள் என்பர் - அந்த அறிவில்லாத சூர்ப்பணகை உயிர் விடவில்லை எனக் கூறுவர்; ஆல் - அசை. காமத்தீயாம் நோயிலிருந்தும் அவள் சாகாதிருப்பதற்குக் காரணம் சூர்ப்பணகை இராமனை அடைந்து வாழலாம் என்ற ஆசை கொண்டமையாகும். இராமன் மீது கொண்ட ஆசையே மருந்தாகி அவளை வாழச் செய்தது. 'பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை தன் நோய்க்குத் தானே மருந்து' (குறள் 1102) என்ற கருத்து இங்கு ஒப்பு நோக்குதற்குரியது. உருக்காட்டுப் படலத்தில் சீதையின் துயர் மொழியில் 'பேணும் உணர்வே! உயிரே! பெருநாள் நாண் இன்று உழல்வீர்; தனி நாயகனைக் காணும் துணையும் கழிவீர் அலிர்' (5235) என்று வரும் பாங்கும் ஒப்பிடற்குரியது. செய்கையின் ஆழியானை என்ற பாடம் கொண்டு சிவந்த கைகளையுடைய இராமனை எனவும் கொள்வர். 85 | 2817. | 'வஞ்சனைக் கொடு மாயை‘ வளர்க்கும் என் நெஞ்சு புக்கு, எனது ஆவத்தை நீக்கு' எனும்; 'அஞ்சனக் கிரியே! அருளாய்' எனும்; நஞ்சு நக்கினர் போல நடுங் குவாள். |
நஞ்சு நக்கினர் போல நடுங்குவாள் - விடத்தை நாவினால் நக்கியவர் போன்று சூர்ப்பணகை உடல் நடுக்கமுற்று; (இராமனை முன் நிற்பது போல் எண்ணி அழைத்து) அஞ்சனக்கிரியே அருளாய் எனும் - மைம்மலை போன்றவனே! எனக்கு அருள் புரிவாயாக என்பாள்; வஞ்சனைக் கொடு மாயை வளர்க்கும் என் நெஞ்சு புக்கு எனது ஆவத்தை நீக்கு எனும் - வஞ்சனையையும் கொடிய மாயையும் வளர்க்கின்ற என் மனத்துள் நீ புகுந்து எனக்குண்டான ஆபத்தைப் போக்குவாய் என்பாள். மதி மயக்கம் கொண்ட சூர்ப்பணகை தன் முன் இராமன் இருப்பதாகவே எண்ணினாள். தன் மனத்துன்பம் தீராததால் கொடிய நஞ்சுண்டவர் உடலும் உயிரும் துடிப்பது போல நடுங்கினாள். தான் செய்யும் வஞ்சனையையும் மாயையையும் தன்னிடமிருந்து நீக்க வேண்டும் என இராமனிடம் தன் குறையை வெளிப்படுத்தினாள் என்பர். இராமனின் திருமேனியும் கறுப்பு. நஞ்சின் நிறமும் கறுப்பு எனக் கொண்டு நஞ்சு நக்கினர் போல நடுங்கினள் என்பர். வேண்டத் தகாத ஆசையைச் சூர்ப்பணகை கொண்டதை நஞ்சு நக்குதற்கு உவமை ஆக்கினர். 'அஞ்சனக்கிரியே' என விளிப்பதற்கேற்ப முன்னர்த் தைலமாட்டு படலத்தில் 'அஞ்சனக் குன்றம் அன்ன அழகனும்' (1890) என்பர். 86 |