பக்கம் எண் :

சூர்ப்பணகைப் படலம் 207

2818.'காவியோ, கயலோ,
     எனும் கண் இணைத்
தேவியோ திருமங் கையின்
     செவ் வியாள்;
பாவியேனையும் பார்க்கும்
     கொலோ?' எனும்-
ஆவி ஓயினும், ஆசையின்
     ஓய்வு இலாள்.

    ஆவி ஓயினும் ஆசையின் ஓய்வு இலாள் - தன் உயிர் ஓய்ந்து
அழிந்தாலும் தான் இராமன் மேல் கொண்ட ஆசையிலிருந்து நீங்காத
சூர்ப்பணகை; காவியோ கயலோ எனும் கண்ணிணைத் தேவியோ -
நீலமலரோ கயல்மீனோ என்று கூறத்தக்க இருகண்களையுடைய அவன்
மனைவியோ; திருமங்கையின் செவ்வியாள் - இலக்குமியை விட
அழகுள்ளவளாக இருக்கிறாள்; (அதனால்) பாவியேனையும் பார்க்கும்
கொலோ எனும் -
பாவியாகிய என்னையும் அவன் கண்ணெடுத்துப்
பார்ப்பானோ என்று கூறி வருந்துவாள்.

     ஆவி ஓயினும் ஆசையின் ஓய்வு இலாள் என்ற கருத்திற்கு ஒப்பாக
நளவெண்பாவில் 'பூவின் வாய் வாளிபுகுந்த வழியே யென் ஆவியார்
போனாலும் மவ்வழியே - பாவியேன் ஆசை போகா தென்றழிந்தாள்' (நள :
1.96) என்ற பாடல் உள்ளது. கண்ணுக்குக் காவியும் கயலும் உவமையாக
வருவது காவிய மரபாகும். 'திருமங்கையில்' என ஒப்புப் பொருளாகக்
கொள்வதும் உண்டு. பாவியும் - இழிவு சிறப்பும்மை கொலோ - கொல்
ஐயப்பொருளிலும் ஓ எதிர் மறைப் பொருளிலும் வந்தன.            87

2819.'மாண்ட கற்புடையாள்
     மலர் மா மகள்,
ஈண்டு இருக்கும் நல்லாள்
     மகள்' என்னுமால்;
வேண்டகிற்பின் அனல்
     வர மெய்யிடைத்
தீண்டகிற்பது அன்றோ,
     தெறும் காமமே?'

    ஈண்டு இருக்கும் நல்லாள் மகள் - (இவன்) அருகில் உள்ள
அழகிய பெண்; மாண்ட கற்புடையாள் மலர்மா மகள் என்னும் -
பெருமை மிக்க கற்புடையவளான செந்தாமரை மலரில் வீற்றிருக்கும்
திருமகளே என்று கூறுவாள்; வேண்டகிற்பின் தெறும் காமமே - (ஒரு
தலைவனை) ஆசைப்பட்டால் (அப்போதே) அழிப்பதாம் ஆசை நோயே;
அனல் வர மெய்யிடைத் தீண்டகிற்பது அன்றோ - நெருப்பைப் போல
வெப்பமுண்டாக உடம்பில் சேர்வதல்லவா எனக் கூறுவாள். ஆல் - அசை.