ஈடுபட்டமையைப் பார்த்தாள்; தம்பி இந்து நோக்கிய நுதலியைக் காத்து- தம்பியாம் இலக்குவன் பிறைமதியைப் போன்ற நெற்றியையுடைய சீதையைப் பாதுகாத்துக் கொண்டு; அயல் கந்தம் நோக்கிய இருண்ட சோலையில் இருந்தது காணாள் - அருகே நறுமணம் வீசிய இருள் நிறைந்த சோலையில் இருந்ததைச் சூர்ப்பணகை பார்க்கவில்லை. பின்னர், 'நின்று அந்த நதியகத்து. நிறை தவத்தின் குறை முடித்து' (2845) என இராமன் வந்த நிலையைக் கூறுவதால் கோதாவரி நதித் துறையிலே சந்தியாவந்தனம் செய்தான் எனலாம். 'இந்து நோக்கிய நுதலி' என்பதில் நோக்கிய என்பது உவம வாசகம் இனிச் சந்திரனும் கண்டு வியக்கும் அழகிய நெற்றியுடையவள் எனலும் ஆம். இந்து - எட்டாம் பிறை. இராமனை வள்ளல் என்றது அவன் உயிர்களுக்கு வரையறையின்றி அருள் புரியும் கடமை பூண்டமையைப் புலப்படுத்தும். இலக்குவனைச் சூர்ப்பணகை காணாததற்குக் காரணம் சோலை இருண்டிருந்தமையாகும். அவன் தனியிடத்து ஒதுங்கியிருந்தமையும் ஆகும். சந்தி என்பது அக்காலத்தே நிகழும் கடன்களைக் குறிக்கும் கால ஆகுபெயராம். 91 | 2823. | 'தனி இருந்தனள்; சமைந்தது என் சிந்தனை; தாழ்வுற்று இனி இருந்தது எனக்கு எண்ணுவது இல்' என, எண்ணா, துனி இருந்த வல் மனத்தினள் தோகையைத் தொடர்ந்தாள்; கனி இரும் பொழில், காத்து, அயல் இருந்தவன் கண்டான். |
தனி இருந்தனள் - (நான் வந்த இப்பொழுதில்) இவள் தனியளாக உள்ளாள்; என் சிந்தனை சமைந்தது - என் எண்ணம் பலித்தது; தாழ்வுற்று இனி இருந்தது எனக்கு எண்ணுவது இல் என எண்ணா - காலம் தாமதித்து இனிமேல் இங்கு இருந்து எனக்கு வேறு செயல் பற்றி நினைக்க வேண்டியது இல்லை என நினைத்து; துனி இருந்த வல் மனத்தினள் தோகையைத் தொடர்ந்தாள் - வெறுப்புடைய கொடிய வன்னெஞ்சினளாம் சூர்ப்பணகை மயில் போன்ற சீதையைப் பிடித்தற்குப் பின் தொடர்ந்தாள்; கனி இரும் பொழில் காத்து அயல் இருந்தவன் கண்டான் - பழங்கள் நிறைந்த பெரிய சோலையில் சீதையைக் காத்து அருகிலிருந்த இலக்குவன் (அதனைப்) பார்த்தான். சமைந்தது - தன் காரியம் கை கூடியது என உறுதியாக எண்ணிய துணிவைக் காட்டும். சீதையிடத்துச் சூர்ப்பணகை வெறுப்புற்றதற்குக் காரணம் அவளருகில் இருப்பதால் இராமன் தன்னை விரும்பான் என எண்ணியதாகும். இதனை முன்னர்ப் 'படியிலாள் மருங்குள்ள அளவு எனை அவன் பாரான்' (2821) என்ற எண்ணத்தில் வெளிப்பட்டது. 'எனக்கு எண்ணுவது இல்' எனத் தன் மீது கொண்ட மிகுந்த நம்பிக்கை இலக்குவன் இருந்ததை அவள் |