அக்கணத்து அவள் வாய் திறந்து அரற்றிய அமலை - அந்த நேரத்தில் சூர்ப்பணகை வாயைத் திறந்து கதறிய ஓசை; திக்கு அனைத்தினும் சென்றது - எல்லாத் திசைகளிலும் சென்று பரவியது; தேவர் தம் செவியும் புக்கது - வானுலகில் உள்ள தேவர்களுடைய காதுகளிலும் சென்று நுழைந்தது; உற்றது புகல்வது என் - இனி அங்கு நடந்ததைச் சொல்ல வேண்டியது என்ன?; மூக்கு எனும் புழையூடு உக்க சோரியின் - அவள் மூக்கு என்ற துளைகளின் வழியே வழிந்த இரத்தத்தினால்; உலகம் ஈரம் உற்று உருகியது - உலகம் முழுவதும் ஈரம் படிந்து கரைந்தது. சூர்ப்பணகை தன் உறுப்பிழந்து இட்ட பேரொலி எட்டுத் திசைகளை எட்டியது மட்டுமன்று வானுலகையும் அடைந்தது என்றதால் பாதலத்தையும் எட்டியது என்பது குறிப்பு. அறுபட்ட மூக்கின் துளைகளிலிருந்து வழிந்த இரத்தத்தின் பெருக்காலும் வெப்பத்தாலும் உலகமே கரைந்தது. இது உயர்வு நவிற்சி அணி. 95 | 2827. | கொலை துமித்து உயர் கொடுங் கதிர் வாளின், அக் கொடியாள் முலை துமித்து, உயர் மூக்கினை நீக்கிய மூத்தம், மலை துமித்தென, இராவணன் மணியுடை மகுடத் தலை துமித்தற்கு நாள் கொண்டது, ஒத்தது, ஓர் தன்மை. |
கொலை துமித்து - கொல்லுவதை நீக்கி; உயர் கொடுங் கதிர் வாளின் அக்கொடியாள் முலை துமித்து - சிறந்த ஒளிமிக்க சுற்றுவாளால் அந்தக் கொடிய சூர்ப்பணகையின் முலைகளை அறுத்து; உயர் மூக்கினை நீக்கிய மூத்தம் - உயர்ந்து விளங்கிய மூக்கையும் அறுத்த நல்ல நேரம்; மலை துமித்தென - மலையின் சிகரங்களை வெட்டியது போல; இராவணன் மணியுடை மகுடத் தலை துமித்தற்கு - இராவணனுடைய இரத்தினம் பதித்த கிரீடங்களை அணிந்த பத்துத் தலைகளை அறுத்தற்கு; நாள் கொண்டது ஒத்தது ஓர் தன்மை - தொடக்கச் சடங்கு செய்ய முகூர்த்தம் செய்ததை ஒத்ததாயிருந்தது. துமித்தல் - விலக்கல், கதிர் என்பது, கூர்மையுமாம். 'கொலை துமித்து' என்பதனை வாளுக்கு அடையாக்கிக், கொன்று பகையை வெட்டி மேம்பட்ட (வாள்) என்பதும் ஆம். மூத்தம் - முகூர்த்தம் இராவணனைக் கொல்ல நேரம் குறித்தல் இக்காண்டத்திலேயே கரன் வதைப் படலத்தில் மூத்தம் ஒன்றில் முடிந்தவர் மொய் புண்ணீர் நீத்தம் ஓடி' (3063) என இப்பொருள் வெளிப்பட வரும். நாள் கொண்டது - குறிப்பிட்ட நல்ல நாளில் நற்செயலைத் தொடங்குதல். கட்டியங்காரனுடன் பின்னர்ச் செய்யும் போருக்கு முதலே நாட் கொண்டது என்பது 'தான் செய்யும் தொழில் நிகழ்த்துவதற்கு முன்பே தொடங்கி வைத்தலை 'என நச்சினார்க்கினியர் உரை (சிந்தா. 448) இதனை மேலும் விளக்கும். |