ஒற்றுதல் மேலும் இரத்தம் பெருகாமலிருப்பதற்காம். உலை உறு தீயைப் பற்றி - உலைமுகப் புகை நிமிர் உயிர்ப்பின் மாய்ந்ததே (527) எனவும் 'கொல்லன் ஊது உலையில் கனல் என்ன வெய்து உயிர்த்தான் (1506) எனவும் வருதல் கொண்டு நன்குணரலாம். சுற்றும் ஓடும் எனத் தனித் தனியாகவும் பொருள் காண்பர். 99 | 2831. | ஊற்றும் மிக்க நீர் அருவியின் ஒழுகிய குருதிச் சேற்று வெள்ளத்துள் திரிபவள், தேவரும் இரிய, கூற்றும் உட்கும் தன் குலத்தினோர் பெயர் எலாம் கூறி, ஆற்றுகிற்கிலள்; பற்பல பன்னி நின்று, அழைத்தாள். |
ஊற்றும் மிக்க நீர் அருவியின் - பொழிகின்ற மிகுந்த நீருள்ள அருவி போல; ஒழுகிய குருதிச் சேற்று வெள்ளத்துள் திரிபவள் - வழிந்தோடும் இரத்தச் சேறாம் நீர்ப் பெருக்கில் அலைபவளாம் சூர்ப்பணகை; ஆற்று கிற்கிலள் - தன்னால் பொறுக்க முடியாதவளாய்; தேவரும் இரிய - அவள் அலறலைக் கேட்டுத் தேவர்களும் நிலை குலைந்து ஓட; கூற்றும் உட்கும் தன் குலத்தினோர் பெயர் எலாம் கூறி- யமனும் அஞ்சும் தன் குலத்தில் பிறந்த அரக்கர் பெயர்களை எல்லாம்எடுத்துக் கூறி; பற்பல பன்னி நின்று அழைத்தாள் - பல பலவாறுவிளக்கமாகக் கூறி நின்று கூப்பிட்டாள். ஊற்றும் - இடைவிடாது பொழியும், தேவரும் அவள் குரல் கேட்டு அஞ்சி ஓடினர்; யமனும் அது கேட்டு மனம் துணுக்குற்றான் என்பதால் அவளது குரலின் ஆற்றல் புலனாம். பன்னுதல் - மீண்டும் மீண்டும் கூறுதல், பெருவெள்ளமாய் இரத்தம் பெருகியதால் அவள் நின்ற இடம் சேறாயிற்று. தேவரும், கூற்றும் - என்பனவற்றில் உள்ள உம்மைகள் உயர்வு சிறப்பின. 100 உறவினரைக் கூவி அழைத்தல் கலி விருத்தம் | 2832. | 'நிலை எடுத்து, நெடு நிலத்து நீ இருக்க, தாபதர்கள் சிலை எடுத்துத் திரியும்இது சிறிது அன்றோ? தேவர் எதிர் |
|