பக்கம் எண் :

சூர்ப்பணகைப் படலம் 217

தலையெடுத்து விழியாமைச் சமைப்பதே!
     தழல் எடுத்தான்
மலை எடுத்த தனி மலையே!
     இவை காண வாராயோ?

    தழல் எடுத்தான் மலை எடுத்த தனி மலையே - தீயைக் கையில்
ஏந்திய சிவனின் கயிலை மலையைக் கையால் எடுத்த ஒப்பற்ற மலை
போன்ற அண்ணாவே!; நீ நெடுநிலத்து நிலை எடுத்து இருக்க - நீ
இந்தப் பெரிய உலகில் நிலை பெற்ற புகழால் விளங்கி நிற்கும் போது;
தாபதர்கள் சிலை எடுத்துத் திரியும் இது சிறிது அன்றோ - தவம்
புரிவோர் வில்லேந்தி நடமாடுவது உன் புகழுக்கு இழுக்கல்லவா?;
(அன்றியும்) தேவர் எதிர் தலை எடுத்து விழியாமைச் சமைப்பதே -
தேவர்கள் முன்னே தலை நிமிர்ந்து பார்க்காமல் வெட்கி நிற்பதும்
ஆகக்கூடியதோ?; இவை காணவாராயோ - (எனக்கு நேர்ந்த இச்
சிறுமைகளை) நீ பார்க்க வரமாட்டாயா?

     தாபதர் - இராமலக்குவர். தவவேடம் பூண்டு வனத்தில் இருந்த
நிலையை இது சுட்டும் 'இவை காண' என்பது தன் உறுப்புகள் அறுப்புண்டு
துன்புறும் நிலையைக் காண எனவும் பொருள்படும். சமைத்தல் -
அமைத்தல்.

     சிவன் கையில் அனலேந்தியது - தாருக வன முனிவர்கள் சிவனை
அழிக்க ஏவிய தீயினைச் சிவன் தன் கையில் ஏந்திய செயலைக் குறிக்கும்.
மலை இராவணனுக்கு உவம ஆகுபெயர்.                          101

2833."புலிதானே புறத்து ஆக, குட்டி
     கோட்படாது" என்ன,
ஒலி ஆழி உலகு உரைக்கும் உரை
     பொய்யோ? ஊழியினும்
சலி யாத மூவர்க்கும்,
     தானவர்க்கும், வானவர்க்கும்,
வலியானே! யான் பட்ட வலி
     காண வாராயோ?

    ஊழியினும் சலியாத மூவர்க்கும் தானவர்க்கும் வானவர்க்கும்
வலியானே -
கற்ப முடிவிலும் ஆற்றல் தளராத மும் மூர்த்திகளுக்கும்
அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் மிக்க வலிமை கொண்ட இராவணனே;
புலி தானே புறத்து ஆக(க்) குட்டி கோட்படாது - தாய்ப் புலியானது
பக்கத்திலிருக்க அதன் குட்டி எவராலும் பிடிக்கப்பட்டுத் துன்புறாது; என்ன
ஒலி ஆழி உலகு உரைக்கும் உரை பொய்யோ -
என்று முழக்கத்துடன்
கூடிய கடல் சூழ்ந்த உலக மக்கள் கூறும் பழமொழி பொய்யோ?;
யான்பட்ட வலி காண வாராயோ - நான் அடைந்த கொடும் துன்பத்தைப்
பார்க்க வரமாட்டாயா?