உதிரமுமுள்ள உடம்பை உடையவர்களாய்; எம் குலத்தோர்க்கு உணவு ஆய - எமது அரக்க குலத்தார்க்கு இரையாக உள்ள; மானுடவர் மருங்கே புக்கு வலி ஒடுங்கினதோ - மனிதரிடத்துச் சென்று அடங்கியதோ?; அம்மா - இது வியப்பிற்குரியது; தம்பியர் - இராவணனின் தம்பிமார்களாகிய கும்பகர்ணன், கரன் முதலியோர். வீடணன் இவர்கள் செயலுக்கு உடன் செல்லான். ஆகையால் அவனை இவள் நினைக்கவில்லை எனலாம். ஊனுடைய உடம்பினர் என்றதால் மானுடர் அரக்கர்க்கு உணவாகும் தகுதியுடையவரன்றி வேறு சிறப்பில்லை என்பது குறிப்பு. உண்பாராகிய அரக்கர்க்கு உண்ணப் படுபவராகிய மானிடர் வலிமை பெற்றவர் ஆய்விட்டாரே என வியப்பு எழுந்ததாம். அம்மா என்ற சொல் இதனைக் குறிக்கும். தேவரையும் - உயர்வு சிறப்பும்மை. 106 | 2838. | 'மரன் ஏயும் நெடுங் கானில் மறைந்து உறையும் தாபதர்கள் உரனேயோ? அடல் அரக்கர் ஓய்வேயோ? உற்று எதிர்ந்தார், "அரனேயோ? அரியேயோ? அயனேயோ?" எனும் ஆற்றல் கரனேயோ! யான் பட்ட கையறவு காணாயோ? |
மரன் ஏயும் நெடுங்கானில் - மரங்கள் அடர்ந்த இப்பெரிய காட்டில்; மறைந்து உறையும் தாபதர்கள் உரனேயோ - அரக்கர்க்கு அஞ்சி ஒளிந்து வாழும் தவம் புரிவோர் வலிமையைக் குறிப்பதோ?; (அல்லது) அடல் அரக்கர் ஓய்வேயோ - வலிமை மிக்க இராக்கதர்களின் வலிமை ஓய்ந்து போனதைக் குறிப்பதோ? (எது என அறியேன்); உற்று எதிர்ந்தார் - எதிர்ப்பட்டுப் போர் புரிந்தார்; அரனேயோ - சிவனோ?; அரியேயோ - திருமாலோ?; அயனேயோ - பிரம்மாவோ?; எனும் ஆற்றல் கரனேயோ - என்று கருதும் வலிமை பொருந்திய கரனே!; யான் பட்ட கையறவு காணாயோ - நான் அடைந்த துன்பத்தை நீ பார்க்க மாட்டாயா? இராவணனை உதவிக்கழைத்த சூர்ப்பணகை கரனைக் கூவி அழைக்கிறாள். கரன் இராவணனுக்குத் தம்பி முறையாவான். இராவணனின் தந்தையாம் விசுரவசு முனிக்கும் இராவணன் தாயாம் கேகசியின் தங்கையாம் கும்பீநசிக்கும் பிறந்தவன். தண்டகாரணியத்தில் சூர்ப்பணகைக்கென உண்டாக்கிய அரசில் அவள் பாதுகாப்புக்கென அமைத்த அரக்கர் சேனையின் முதல் தலைவனாவான். தம் பகைவரை அழிக்கும் வலிமை படைத்த சிவன், திருமால், பிரம்மா போன்று வலிமை படைத்தவன் கரன். மனிதரால் தான்பட்ட துன்பத்தை அண்மையிலுள்ள கரன் கேட்டு உதவி செய்ய வாரானோ எனக் கூவினாள். காட்டில் வாழும் தவசியர் வலிமைக்கு நகரங்களில் வாழும் அரக்கர் வலிமை குன்றியதோ என அவள் ஐயுற்றாள். |