கலன்களை அணிந்த இராக்கதர் குலத்தில் தோன்றியவர்களே!; கொல் ஈரும் படைக் கும்பகருணனைப் போல் - கொல்லனால் அராவப்பட்ட கூரிய படைக்கலன் கொண்ட கும்பகருணனைப் போன்று; குவலயத்துள் எல்லீரும் உறங்குதிரோ - உலகத்தில் எல்லோரும் தூங்குகின்றீர்களா?; யான் அழைத்தல் கேளீரோ - (அதனால்) நான் கூப்பிடுவதைக் கேட்க மாட்டீர்களா? சேய்மைக் கண் உள்ள இலங்கையில் இராவணன் இந்திரசித்துப் போன்றவர்கள் நான் கதறுவதைக் கேட்காமலிருக்கலாம். ஆனால் அண்மையிலுள்ள கரன் தூடணன் போன்றவர்கள் கேட்கலாம். ஆனால் அவர்கள் கேளாததற்குக் கும்பகருணன் போல உறங்கி விட்டார்களோ என ஐயுறுகிறாள் சூர்ப்பணகை. கும்பகருணன் - குடம் போலக் காதை உடையவன். இவன் தவம் செய்த போது பிரமன் இவன் முன் தோன்றி 'வரம் கேள்' என அருளிய போது இவன் நாவில் வந்து தங்கிய கலைமகளின் சூழ்ச்சியால் என்றும் நித்திரையுள்ளவனாக வரம் கேட்டதால் எப்போதும் தூங்கிய வண்ணமிருந்தான். இது புராண வரலாறு. இராமாவதாரக் காப்பியத்தில் அரக்கர்களும் அவதாரம் செய்ததாகவே சூர்ப்பணகை விளிக்கின்றாள். 113 இராமன் வர, அவனிடம் முறையிடுதல் | 2845. | என்று, இன்ன பல பன்னி, இகல் அரக்கி அழுது இரங்கி, பொன் துன்னும் படியகத்துப் புரள்கின்ற பொழுதகத்து, நின்று, அந்த நதியகத்து, நிறை தவத்தின் குறை முடித்து, வன்திண்கைச் சிலை நெடுந்தோள் மரகதத்தின் மலை வந்தான். |
என்று இன்ன பல பன்னி - என இவ்வாறு பலவற்றைச் சொல்லி; இகல் அரக்கி அழுது இரங்கி - வலிய அந்தச் சூர்ப்பணகை புலம்பி வருந்தி; பொன் துன்னும் படியகத்துப் புரள்கின்ற பொழுதகத்து - அழகு மிக்க (அத்தவச்சாலையின்) நிலத்திடத்துப் புரண்டழும் காலத்து; வன் திண்கைச் சிலை நெடுந்தோள் மரகதத்தின் மலை - மிகவலிய கையில் வில்லை ஏந்தி நெடுந் தோளுடைய மரகதம் போன்ற மலை எனும்படி உள்ள இராமன்; அந்த நதியகத்து நிறை தவத்தின் குறை முடித்து நின்று வந்தான் - அக்கோதாவரி ஆற்றின் துறையில் விதி முறைப்படி செய்யும் நாட்கடன்களைச் செய்து முடித்து அங்கிருந்து தவச்சாலை நோக்கி வந்தான். பன்னுதல் - பலமுறை வருந்திக் கூறுதல். முன்னரும் 'தன் குலத்தினோர் பெயரெலாங் கூறி ஆற்றுகிற்கிலள்; பற்பல பன்னி நின்று அழைத்தாள்' (2831) என வரும். பொன் - அழகு. 'பொன் புனைந்த கழலடியோன்' (பு. வெ. மாலை 7.2. கொளு) என்று இப்பொருளில் பயன்பட்டுள்ளது. பொழுது - இங்குக் காலையைக் குறிக்கும். இராமனுக்கு மரகதமலை இக்காப்பியத்தில் பல இடங்களில் 'மரகதப் பெருங்கல்' (532) |