நம்மை விட்டு; அப்பால் ஏகாள் - மூக்கை இழந்த பிறகு வேற்றிடம் செல்லாள்; பின் இவளை அயல் ஒருவர் பாரார் என்றே - பின்னர் இப்பெண்ணை மற்றவர் எவரும் கண்ணெடுத்துப் பார்க்க மாட்டார் என்று; அரிந்தீர் - என் முக்கை அறுத்தீர்; பிழை செய்தீரோ - ஆதலால் நீங்கள் தவறு செய்தவர் ஆவீர்களோ (மாட்டீர்); அன்னதனை அறிந்து அன்றோ - அவ்வுண்மையை அறிந்து அல்லவா; அன்பு இரட்டி நான் பூண்டது - உங்களிடத்து இருமடங்கு அன்பு நான் கொண்டேன்; அறிவு இலேனோ - நான் இதை உணராத அறிவு இல்லாதவளா? (இல்லை). ஏ - அசை. மூக்கரிந்ததற்குரிய காரணத்தைச் சூர்ப்பணகை கூறும் முறை வியப்பிற்குரியது. அழகான இவள் நம்மை விட்டுப் பிறரிடம் போய்விடக் கூடாது என்ற உணர்வால் இலக்குவன் அரிந்ததும் அதை உணரும் அறிவைத் தான் பெற்றிருந்ததையும் கற்பித்துக் கூறும் போது அவள் திறன் எல்லை கடந்து செல்கிறது. கம்பரின் நாடகத்திறனுக்கு இது தக்க சான்றாம்.133 2865. | 'வெப்பு அழியா நெடு வெகுளி வேல் அரக்கர் ஈது அறிந்து வெகுண்டு நோக்கின், அப் பழியால், உலகு அனைத்தும், நும் பொருட்டால் அழிந்தன ஆம்; அறத்தை நோக்கி, ஒப்பழியச் செய்கிலார் உயர் குலத்துத் தோன்றினோர்; உணர்ந்து, நோக்கி, இப் பழியைத் துடைத்து உதவி, இனிது இருத்திர், என்னொடும்' என்று, இறைஞ்சி நின்றாள். |
வெப்பு அழியா வெகுளி நெடுவேல் அரக்கர் - கொதிப்பு நீங்காத சினமுடைய நீண்ட வேலை ஏந்திய இராக்கதர்கள்; ஈது அறிந்து வெகுண்டு நோக்கின் - (எனக்கு நீங்கள் செய்த) இக்கொடுமையை அறிந்து சினந்து பார்த்தாரானால்; அப்பழியால் உலகு அனைத்தும் நும் பொருட்டால் அழிந்தன ஆம் - பழிவாங்கும் அச் செயலால் உலகங்கள் எல்லாம் உம் கொடிய செயல் காரணமாக அழிந்து போனவை ஆகும்; அறத்தை நோக்கி - தருமத்தை எண்ணி; உயர் குலத்துத் தோன்றினோர் ஒப்பழியச் செய்கிலார் - மேலான குலத்தில் பிறந்தோர் உலகம் ஏற்கும் முறை கெடும் படியான செயலைச் செய்ய மாட்டார்கள்; (ஆதலால்) உணர்ந்து நோக்கி இப்பழியைத் துடைத்து உதவி என்னொடும் இனிது இருத்திர் - இந்த பழிபடும் செயலை நீக்கி அருள் செய்து என்னுடன் சேர்ந்து நன்கு வாழ்வீர்; என்று இறைஞ்சி நின்றாள் - என வணங்கி நின்றாள் சூர்ப்பணகை. |