பக்கம் எண் :

244ஆரணிய காண்டம்

மறித்தார் - நீண்டகாலம் வாழ்ந்த தேவர்கள் தோற்று ஓடிப் போனார்கள்;
ஈண்டு இவர் இருவர் மானிடவர் என்னாது - இங்குள்ள இவர் இருவரும்
மனிதர்கள் எனக் குறைவாகக் கருதாமல்; வல்லை ஆகின் - திறமை
உடையவள் ஆனால்; வெறித் தாரை வேல் அரக்கர் விறல் இயக்கர்
முதலினர் -
மணமிக்க மாலை அணிந்த வேற்படையை உடைய இராக்கதர்
வெற்றி பூண்ட இயட்சர்கள் முதலானவர்கள் - ஆகியோருள்; நீ மிடலோர்
என்று குறித்தாரை -
நீ வலிமையுடையோர் எனக் கருதியவர்கள்;
யாவரையும் கொணருதியேல் நின் எதிரே கோறும் - எல்லோரையும்
போரிட அழைத்து வந்தால் உன் முன்னே அவர்களைக் கொல்வோம்,
என்றான் - எனக் கூறினான் இராமன்.

     அரக்கர் வழி அல்லாத வழி என்பதைச் சுட்ட 'நெறித்தாரை
செல்லாத' என்றார். தேவரே தோற்கும் போது மனிதர் தாமே இவர் என
மதிக்கமாட்டாள் என்ற குறிப்பு இதில் புலப்படுகிறது. இயக்கரைச் சுட்டியது
குபேரன் இவள் தமயன் எனக் குறித்ததால். வெறி - என்பதற்கு புலால்
நாற்றம் எனலுமாம். வெறித்தார்+ஐ+வேல்+அரக்கர் எனப் பிரித்து
செருக்குற்றவரான அழகிய வேல் ஏந்திய இராக்கதர் எனவும் பொருள்
கூறலாம்.

     இராமனின் வீரவுரை சூர்ப்பணகையின் வீரர்குலப் பெருமைக்குரிய
விடையாகும்.                                                137

சூர்ப்பணகை மீண்டும் வற்புறுத்தல்

2869.'கொல்லலாம்; மாயங்கள் குறித்தனவே
     கொள்ளலாம்; கொற்ற முற்ற
வெல்லலாம்; அவர் இயற்றும் வினை எல்லாம்
     கடக்கலாம்;-மேல் வாய் நீங்கி,
பல் எலாம் உறத் தோன்றும் பகு வாயள்"
     என்னாது, பார்த்தி ஆயின்,
நெல் எலாம் சுரந்து அளிக்கும் நீர் நாட!
     கேள்' என்று, நிருதி கூறும்:

    நெல் எலாம் சுரந்து அளிக்கும் நீர் நாட - நெல் முதலிய
பொருள்களை மிகுதியாக விளைத்தளிக்கும் நீர்வளமுள்ள கோசல
நாட்டவனே; கேள் - கேட்பாயாக; மேல்வாய் நீங்கி(ப்) பல் எலாம் உறத்
தோன்றும் பகுவாயள் என்னாது பார்த்தி ஆயின் -
வாயின் மேற்புறம்
அறுபட்டுப் பற்கள் எல்லாம் நன்றாக வெளிப்பட்ட பெரிய வாயினை
உடையவள் என என்னை இகழாமல் கருணை கொண்டு அருள்புரிவாய்
என்றால்; கொல்லலாம் - (அரக்கர்களையும் மற்றவர்களையும்)
கொன்றுவிடலாம்; மாயங்கள் குறித்தனவே கொள்ளலாம் - அவர்களின்
மாயச் செயல்களை முன்னதாக அறிந்து மேற்கொள்ளலாம்; கொற்ற முற்ற
வெல்லலாம் -
அரசுகள் அனைத்தும் வென்று ஆளலாம்; அவர் இயற்றும்
வினை எல்லாம் கடக்கலாம் -
அரக்கர் முதலியோர் செய்யும் வஞ்சனைச்
செயல்களை வெல்லலாம்; என்று நிருதி கூறும் - என்று அரக்கியாம்
சூர்ப்பணகை சொல்வாள்.