பக்கம் எண் :

சூர்ப்பணகைப் படலம் 245

     நாடு, நெல்வளம் சுரப்பது போல இராமன் தன் மீது அருள் புரிய
வேண்டும் என்பது இதன் கருத்து ஆம். மேல்வாய் நீங்கி என்பதால்
இலக்குவன் சூப்பணகையின் மூக்கை அறுத்த போது அவள் மேலுதடும்
அறுபட்ட நிலை தெரியும். தன் அவல நிலையை இவ்வாறு கூறி இராமனின்
கருணையைப் பெற நினைத்தாள். முன்னர்க் கூறிய இராமனின் சொற்கள்
இவளிடம் எம்மாற்றத்தையும் உண்டாக்கவில்லை என இதனால் அறியலாம்.
அரக்கரை வெல்லத் தன்பால் இராமன் அருள் செய வேண்டும் என்பதை
மேலும் வலியுறுத்துகிறாள்.                                      138

2870.'காம்பு அறியும் தோளாளைக் கைவிடீர்;
     என்னினும், யான் மிகையோ? கள்வர்
ஆம், பொறி இல், அடல் அரக்கர் அவரோடே
     செருச் செய்வான் அமைந்தீர் ஆயின்,
தாம் பொறியின் பல மாயம் தரும் பொறிகள்
     அறிந்து, அவற்றைத் தடுப்பென் அன்றே?
"பாம்பு அறியும் பாம்பின் கால்" என
     மொழியும் பழமொழியும் பார்க்கிலீரோ?

    காம்பு அறியும் தோளாளைக் கைவிடீர் என்னினும் - மூங்கில்
போலும் தோளை உடைய உம் மனைவியைத் (சீதையை) துறக்க மாட்டீர்
என்றாலும்; யான் மிகையோ - நான் உம்மோடு சேர்ந்திருப்பது
அதிகமாகுமா? (ஆகாது); கள்வர் ஆம் பொறிஇல் அடல் அரக்கர்
அவரோடே செருச் செய்வான் அமைந்தீர் ஆயின் -
வஞ்சகரான
அறிவும் திருவுமில்லாத வலிமிக்க இராக்கதர்களுடனே போர் செய்ய
விரும்பினீர் என்றால்; தாம் பொறியின் பல மாயம் தரும் பொறிகள்
அறிந்து -
இராக்கதர் தாம் ஐம்பொறிகள்போல் பல மயக்கந்தரும்
வஞ்சனைகள் செய்யும் அவர்களின் தந்திரங்களை அறிந்து; அவற்றைத்
தடுப்பென் அன்றே -
அத்தந்திரச் செயல்களைத் தடுத்து விடுவேன்
அல்லவா?; பாம்பு அறியும் பாம்பின் கால் என மொழியும் பழமொழியும்
பார்க்கிலீரோ -
பாம்பானது பாம்பின் காலை அறியும் எனக் கூறும் உலக
முதுமொழியையும் அறியீரோ?

     காம்பு - மூங்கில். மகளிர் தோள்களுக்கு மூங்கில் உவமை ஆகும்.
அறியும் - போலும், அரக்கர் குலத்தில் பிறந்தும் சூர்ப்பணகை அவர்களைக்
'கள்வர்' எனக் கூறுவது இராமனை அடைய விரும்பியதின் விளைவு. அவன்
வெறுத்தவர்களை அவளும் வெறுப்பதாகக் காட்டுவதுடன் அவர்களை
அழிக்க அவனுக்குத் துணை யாவதாகவும் ஆசை மீதூரக் கூறுகிறாள்.
மேலும் விளக்கம் தரப் பழ மொழியையும் எடுத்துரைக்கிறாள்.
'புலமிக்கவரைப் புலமை தெரிதல் புலமிக்கவர்க்கே புலனாம் - நலமிக்க
பூம்புனலூர பொது மக்கட்காகாதே பாம்பறியும் பாம்பின கால் (பழமொழி
நானூறு 5.) என்பது கீழ்க்கணக்காம். பாம்புறையும் இடம் எனக் கூறுவர்
'அரவுக் குறியி னயலவரறியா' (பெருங். 4.13.149) என்பதும் காண்க.     139