| மருங்கு இலாதவளோடும் அன்றோ" நீ "நெடுங்காலம் வாழ்ந்தது" என்பாய். |
பெருங்குலா உறு நகர்க்கே ஏகும் நாள் - பெரிய கொண்டாட்டம் மிகுந்த அயோத்தி நகரத்து நீங்கள் மீண்டு செல்லும் நாளில்; வேண்டும் உருப்பிடிப்பேன் - நீங்கள் வேண்டும் வடிவம் கொள்வேன்; அன்றேல் - அல்லாவிடில்; இளையவன் தான் அருங்க லாம் உற்று இருந்தான் என்னினும் ஆம் - உன் தம்பி நீங்கற்கரிய கோபம் கொண்டவனாயிருந்தான் ஆயினும்; அரிந்த நாசி ஒருங்கு இலா இவளோடும் உறைவெனோ என்பானேல் - அறுபட்ட மூக்கு முழுதுமில்லாதவளுடனே வாழ்வேனோ என்று கூறுவானாயினும்; இறைவ நீ - தலைவனே நீ; மருங்கு ஒன்றும் இலாதவளோடும் அன்றோ நெடுங்காலம் வாழ்ந்தது என்பாய் - இடை சிறிதும் இல்லாதவளோடு அன்றோ நீண்ட காலம் வாழ்ந்து வந்தாய் என விடை கூறுவாய். குலா - மகிழ்ச்சியும் ஆம் உருப்பிடிப்பேன் - வேண்டும் உருவத்தை விரும்பியவாறு அமைத்து கொள்வேன் என்றாள். இதற்கு இவளுடைய மாய ஆற்றல் பயன்படும் என்பதாம். அருங்கலாம் - அரிய கலாய்ப்பு. என்பது பழைய உரை. இனி அரிய காரியம் பல சாதித்தோம் எனவுமாம். பெண்டிர்க்கு இடை நுணுகி இருத்தல் அழகு. அதனை மருங்கில்லாதவள் என உயர்வு நவிற்சியால் கூறுவாள். மூக்கின்மைக்கு இடையின்மை சாலும் என விடை கூறுமாறு சூர்ப்பணகை வேண்டுகிறாள். 141 சூர்ப்பணகை அவர்களை அச்சுறுத்தி அகலுதல் 2873. | என்றவள்மேல், இளையவன்தான், இலங்கு இலை வேல் கடைக்கணியா, 'இவளை ஈண்டு கொன்று களையேம்என்றால், நெடிது அலைக்கும்; அருள் என்கொல்? கோவே!' என்ன, 'நன்று, அதுவே ஆம் அன்றோ? போகாளேல் ஆக!' என நாதன் கூற, 'ஒன்றும் இவர் எனக்கு இரங்கார்; உயிர் இழப்பென், நிற்கின்' என, அரக்கி உன்னா. |
என்றவள்மேல் - என்று கூறிய சூர்ப்பணகையின் மேல்; இளையவன் தான் இலங்கு இலை வேல் கடைக் கணியா - இலக்குவன் விளங்குகின்ற இலை வடிவிலுள்ள வேலைக் கடைக் கண்ணால் பார்த்து; இவளை ஈண்டு கொன்று களையேம் என்றால் நெடிது அலைக்கும் - இந்த அரக்கியை இவ்விடத்தில் கொன்று ஒழித்திடவில்லை எனின் மிகவும் வருத்துவாள்; |