அருள்என் கொல் கோவே என்ன - (உன்) கட்டளை எதுவோ தலைவா! என்று கேட்க; நன்று அதுவே ஆம் அன்றோ போகாளேல் ஆக என நாதன் கூற - நற்செயல் நீ கூறியதே ஆகும் அல்லவா அவ்வாறு அவள் போகாவிடில் அவ்வாறே செய்க என்று தலைவனாம் இராமன் சொல்ல; எனக்கு ஒன்றும் இவர் இரங்கார் நிற்கின் உயிர் இழப்பென் என அரக்கி உன்னா - என்னிடம் ஒரு வகையிலும் இவர்கள் அருள் செய்ய மாட்டார் இனி இங்கு நின்றால் என் உயிரை இழப்பேன் எனச் சூர்ப்பணகை எண்ணி; கடைக்கணியா - போர் செய்யும் போது வீரர் தம் போர்க் கருவியைப் பார்த்துக் கூறுதல், அது அவர்கள் அப்போர்க் கருவி கொண்டு செய்யும் போர்த் தொழிலையும் சுட்டும். அருள் என் கொல் - இடும் ஆணை எதுவோ? என எதிர் நோக்கிக் கேட்டது. இனி, இவ்வரக்கியிடம் இதுவரை அருள் காட்டுவதன் காரணம் எதுவோ என்றலுமாம். இருவர் உரையாடலும் அவர்தம் நிலையைக் காட்டும் நாடகத் திறம் புலப்பட அமைந்துளது. 142 2874. | 'ஏற்ற நெடுங் கொடி மூக்கும், இரு காதும், முலை இரண்டும், இழந்தும், வாழ ஆற்றுவனே? வஞ்சனையால், உமை உள்ள பரிசு அறிவான் அமைந்தது அன்றோ? காற்றினிலும் கனலினிலும் கடியானை, கொடியானை, கரனை, உங்கள் கூற்றுவனை, இப்பொழுதே கொணர்கின்றேன்' என்று, சலம்கொண்டு போனாள். |
ஏற்ற நெடுங் கொடி மூக்கும் இருகாதும் முலை இரண்டும் இழந்தும் வாழ ஆற்றுவனே - என் அழகுக்குப் பொருத்தமாயிருந்த நீண்ட கொடி போலும் உயர்ந்திருந்த மூக்கும் இரண்டு செவிகளும் இரு கொங்கைகளும் அறுக்கப் பெற்றும் உயிரோடு வாழ்வதைப் பொறுத்து இருப்பேனோ (மாட்டேன்); வஞ்சனையால் உமை உள்ள பரிசு அறிவான் அமைந்தது அன்றோ - கபடமாய் நான் உம்முடைய நோக்கினை அறியச் செய்த செயல் அல்லவா?; (ஆதலால்) காற்றினிலும் கனலினிலும் கடியானை - காற்றையும் தீயையும் விட ஆற்றலுடையானை; கொடியானை - கொடியவனை; கரனை - கரன் எனும் பெயருடையவனை; உங்கள் கூற்றுவனை இப்பொழுதே கொணர்கின்றேன் - உங்களை அழிக்கும் யமனை இக்கணத்தே கூட்டி வருகிறேன்; என்று சலம் கொண்டு போனாள் - எனக் கூறித் தணியாத கோபமுற்றுச் சென்றாள். 'நெடுங் கொடி மூக்கு' என்பதை முன்னரே 'மேக்கு உயரும் நெடு மூக்கு' எனக் கூறினாள் (2861). காற்றுப் போல் வேகமும் தீப்போலக் கொடுமையும் பூண்ட என நிரல் நிரையாகப் பொருள் கூறுவர். சலம் - தணியாப் பகையுமாம். 'சலம் புணர்கொள்கைச் சலதி' எனச் சிலப்பதிகாரம் கூறுவதும் கொண்டு (சிலம்பு.9.69) முன்னர்க் காதல் மொழி கூறியும் இறுதியில் |