ஓடின - அறுபட்டு அப்பால் விழுந்தன; தீயவள் ஓடினாள் - (அதுகண்டு) கொடியவளான சூர்ப்பணகையும் அஞ்சி ஓடலுற்றாள். அந்தப் படைத் தலைவர் பதினால்வரின் கைகளும் பிடித்த படைக் கருவிகளோடு அற்றுக் கீழே விழுந்திடவும் அவர்கள் சலியாமல் நின்று தம் மார்பு வலிமையால் போர் செய்ய, அப்போது இராமனின் அம்புகள் விரைந்து சென்று தைக்க அவர்களின் தலைகள் அறுபட்டு வீழ்ந்தன என்பது. வாள் - இங்கே படைக் கருவிகளின் பொதுவைக் குறித்தது. சரங்கள் ஓடின, சிரங்கள் ஓடின, தீயவள் ஓடினாள் என்ற அடுக்கு விரைவில் உண்டான ஏக கால நிகழ்ச்சிகளின் குறிப்பை உணர்த்தியது. 20 கரன் வெகுண்டு எழுதல் 2895. | ஒளிறு வேல் கரற்கு, உற்றது உணர்த்தினாள்- குளிறு கோப வெங் கோள் அரிமா அட, களிறு எலாம் பட, கை தலைமேல் உற பிளிறி ஓடும் பிடி அன்ன பெற்றியாள். |
குளிறு - கர்ச்சிக்கின்ற; கோப வெங் கோள் அரிமா - சினத்தையுடைய கொடிய வலிய சிங்கம்; அட - கொன்றதால்; களிறு எலாம் பட - ஆண் யானைகளெல்லாம் இறந்தொழிய (அதுகண்டு); கை தலைமேல் உற - துதிக்கை தன் தலை மேல் படிய வைத்துக் கொண்டு; பிளிறி ஓடும் - வீரிட்டு ஓடுகின்ற; பிடி அன்ன - பெண் யானை போன்ற; பெற்றியாள் - தன்மையுடையவளான சூர்ப்பணகை; ஒளிறு வேல் கரற்கு - ஒளிவீசும் வேலேந்திய கரனிடம்; உற்றது உணர்த்தினாள் - நடந்த செய்தியைத் தெரிவித்தாள். சிங்கம் அடர்த்ததனால் தன் குலத்துக் களிறுகளெல்லாம் இறந்தொழியத் தன் துதிக்கையை மத்தகத்துக் கொண்டு வீரிட்டோடுகின்ற பெண்யானை போல இராமபிரானால் அரக்கப் படை வீரர்கள் அழியவே தன் கையைத் தலைமேற் கொண்டு சூர்ப்பணகை கதறியவாறு ஓடிப்போய்க் கரனுக்கு உணர்த்தினாள் என்பது. அரிமா இராமனுக்கும், களிறு அரக்கர்க்கும், பிடி சூர்ப்பணகைக்கும் உவமை. உவமையணி யானை அஞ்சி வெருண்டோடும் போது துதிக்கை தலைமேல் பொருந்தத் தூக்கிக் கொண்டு ஓடும் இயல்பினது. 21 2896. | 'அங்கு அரக்கர் அவிந்து அழிந்தார்' என, | |