பக்கம் எண் :

விராதன் வதைப் படலம் 27

2559.புண்ணிடைப் பொழி உயிர்ப் புனல்
     பொலிந்து வரவும்,
விண்ணிடைப் படர்தல் விட்டு, எழு
     விகற்பம் நினையா,
எண்ணுடைக் குரிசில் எண்ணி,
     ‘இளையோய்! இவனை, இம்
மண்ணிடைக் கடிது பொத்துதல்
     வழக்கு’ எனலுமே

    புண்ணிடைப் பொழி உயிர்ப் புனல் பொலிந்து வரவும் - உடலிற்
பட்ட புண்களிலிருந்து பெருகிய இரத்த வெள்ளம் விளங்கி ஓடவும்;
விண்ணிடைப்படர்தல் விட்டு - வானில் செல்வதைத் தவிர்த்து; எழு
விகற்பம் நினையா -
அவன்எழுந்து செல்லும் மாறுபாட்டை நினைத்து;
எண்ணுடைக் குரிசில் எண்ணி - எண்ணத்தில்சிறந்த இராமன் உணர்ந்து;
இளையோய்! - தம்பி!; இவனை இம் மண்ணிடைக் கடிதுபொத்துதல்
வழக்கு -
இவ்வரக்கனை இந்த நிலத்தில் விரைவாக மூடுதல் வழக்கு;
எனலுமே -என்ற அளவில்; ஏ - ஈற்றசை.

     உயிர்ப்புனல் உயிர் இருப்பதற்காக உடலில் ஓடும் இரத்தம். விராதன்
படைகளால்இறவாததால் மண்ணில் புதைத்தலை இராமன் கூறினான்.
குரிசில் - பெருமையிற் சிறந்தவன்,ஆண்பால் சிறப்புப் பெயர்.         43

2560.மத நல் யானை அனையான் நிலம்
     வகிர்ந்த குழிவாய்
நதம் உலாவு நளி நீர்வயின்
     அழுந்த, நவை தீர்
அதவம் ஆய் நறு நெய் உண்டு உலகில்
     அன்பர் கருதிற்று
உதவு சேவடியினால், அமலன்
     உந்துதலுமே

    நவை தீர் அதவம் ஆய் நறுநெய் உண்டு - குற்றமற்ற
அத்திக்கட்டையால் செய்த அகப்பை கொண்டு பெய்த நறு மண நெய்யை
உண்டு; உலகில்அன்பர் கருதிற்று உதவு சேவடியினால் - உலகத்தில்
அடியவர் நினைத்தவற்றை அருளும் சிவந்ததன் திருப்பாதத்தால்;
அமலன் - தூயவனான இராமன்; உந்துதலும் - உதைத்துத்தள்ளவும்;
நல்மத யானை அனையான் - சிறந்த மதம் கொண்ட யானை போன்ற
இலக்குவன்; நளிநீர் உலாவு நதம்வயின் - மிகுந்த நீர் பாயும் மேற்கு
நோக்கி ஓடும் ஆற்றின்அருகில்; நிலம் வகிர்ந்த குழிவாய் - மண்ணில்
தோண்டிய குழியில்; அழுந்த - பதிய; ஏ - ஈற்றசை.