(அந்தச் சேனை வீரர்கள்) உரத்தினர் - மிக்க வலிமை வாய்ந்தவர்கள்; உரும் என உரறும் வாயினர் - இடி போல முழங்கும் பேச்சினையுடையவர்கள்; கரத்து எறி படையினர் - கைகளால் வீசியெறியும் ஆயுதங்களையுடையவர்கள்; கமலத்தோன் தரும் வரத்தினர்- தாமரைப் பூவில் தோன்றிய பிரமன் தந்த வரங்களைப் பெற்றவர்கள்; மலை என, மழை துயின்று எழு சிரத்தினர் - மலைகளென்று எண்ணி மேகங்கள் நீண்ட பொழுது தங்கிப் பின்பு எழுந்து சென்ற தலையையுடையவர்கள்; தருக்கினர் - கருவம் மிக்கவர்கள்; செருக்கும் சிந்தையார் - போரில் பகைவரையழிக்கும் எண்ணங் கொண்டவர்கள். மலையென மழைதுயின்றெழு சிரத்தினர் - மயக்க வணி உரறுதல் - முழக்குதல். கரத்து - உருபுமயக்கம். அரக்கரின் தலைவர்கள் மட்டுமல்லாமல், பொதுவாக அரக்கர் பலரும் தவத்தால் வரம் பெற்றவர்கள் என்ற குறிப்பினைக் 'கமலத் தோன் தரும் வரத்தினர்' என்ற தொடரால் புலப்படுத்துகிறார். செருத்தல் - அழித்தல். செருக்கதல் - எழுச்சியுறுதல்; உற்சாகம் என்றும் கொள்ளலாம். 39 | 2914. | விண் அளவிட நிமிர்ந்து உயர்ந்த மேனியர்; கண் அளவிடல் அரு மார்பர்; காலினால், மண் அளவிடு நெடு வலத்தர்; வானவர் எண் அளவிடல் அருஞ் செரு வென்று ஏறினார். |
விண் அளவிட - ஆகாயத்தை அளந்து பார்க்கும்படி; நிமிர்ந்து உயர்ந்த மேனியர் - மிக ஓங்கி வளர்ந்த உடம்பையுடையவர்கள்; கண் அளவிடல் அரு மார்பர் - கண்களால் பார்த்து அளவிட்டுக் கூறமுடியாத விரிந்த மார்பையுடையவர்கள்; காலினால் மண் அளவிடு - (தங்கள்) கால்களால் பூமியை அளந்து பார்க்கக் கூடிய; நெடு வலத்தர் - மிகுந்த வலிமையுடையவர்கள்; வானவர் - தேவர்களோடு நிகழ்ந்த; எண் அளவிடல் அருஞ்செரு - எண்ணால் கணக்கிட்டுச் சொல்ல முடியாத போர்களில்; வென்று ஏறினார் - போர்களில் (அவர்களை) வெற்றி கண்டு மேம்பட்டவர்கள். எண் அளவிட - மனத்திலே கொண்டு மதிக்கும்படி. செருவரும் - (இப்பொழுது) பெரும் போர் நேரும் என்று ஏறினார் - என்று எண்ணி வீராவேசம் மிகப் பெற்றவர்கள் என்றும் உரை காணலாம். வலம் - பலம், வலிமை, வெற்றி. 40 |