| 2915. | இந்திரன் முதலினோர் எறிந்த மாப் படை சிந்தின தெறித்து உக, செறிந்த தோளினார்; அந்தகன், அடி தொழுது அடங்கும் ஆணையார்; வெந் தழல் உருவு கொண்டனைய மேனியார் |
இந்திரன் முதலினோர் - இந்திரன் முதலான தேவர்கள்; எறிந்த மாப்படை - (தம்மேல்) வீசித் தாக்கிய சிறந்த ஆயுதங்கள்; சிந்தின தெறித்து உக - (தம்மைச் சிறிதும் ஊறு படுத்தாமல்) தெறித்துச் சிதறிப் பொடியாகச் சிந்திப் போகும்படி; செறிந்த தோளினார் - வலிமை செறிந்த தோள்களை யுடையவர்கள்; அந்தகன் அடிதொழுது - (உயிர்களை வதைக்கும்) யமனும் தங்கள் பாதங்களில் வணங்கி; அடங்கும் ஆணையார் - அடங்கிப் பணியும்படி செய்யும் அதிகாரமுடையவர்கள்; வெந்தழல் - கொடிய நெருப்பே; உருவு கொண்டு அனைய மேனியார் - ஒரு வடிவெடுத்து வந்தாற்போன்ற வடிவம் உடையவர்கள். வெம் தழல் உருவு கொண்டனைய மேனியார்- தற்குறிப்பேற்றவணி. 41 | 2916. | சூலமும், பாசமும், தொடர்ந்த செம் மயிர்ச் சாலமும், தறுகணும், எயிறும், தாங்கினார்; 'ஆலமும் வெளிது' எனும் நிறத்தர்; ஆற்றலால், காலனும், 'காலன்' என்று, அயிர்க்கும் காட்சியார். |
சூலமும் - சூலாயுதத்தையும், பாசமும் - பாசம் என்னும் ஆயுதத்தையும்; தொடர்ந்த செம்மயிர்ச் சாலமும் - அடர்ந்த சிவந்த மயிர்த் திரளையும்; தறுகணும் - அஞ்சாமையையும்; எயிறும் - கோரப் பற்களையும்; தாங்கினார் - கொண்டவர்கள்; ஆலமும் வெளிது எனும் நிறத்தர் - நஞ்சும் (தங்கள் நிறத்திற்கு முன்) வெண்மையானது என்று சொல்லத்தக்கவாறு கரிய நிறத்தையுடையவர்கள்; ஆற்றலால் - (தமது) வலிமையால்; காலனும் - யமனும்; காலன் என்று அயிர்க்கும் - (தன்னையழிக்கும்) யமனோ என்று ஐயம் கொள்ளத்தக்க; காட்சியார் - தோற்றமுடையவர்கள். |