அரக்கரின் கருமை நிறத்தை விளக்க 'ஆலமும் வெளிதென்னும் நிறத்தர்' என்றார். காலம் - திரள். 42 | 2917. | கழலினர்; தாரினர்; கவச மார்பினர்; நிழலுறு பூணினர்; நெறித்த நெற்றியர்; அழலுரு குஞ்சியர்; அமரை வேட்டு, உவந்து, எழலுறு மனத்தினர்; ஒருமை எய்தினார். |
கழலினர் - (காலில்) வீரக் கழல் பூண்டவர்கள்; தாரினர் - மாலையை யணிந்தவர்கள்; கவச மார்பினர் - கவசம் தரித்த மார்பையுடையவர்கள்; நிழல் உறு பூணினர் - ஒளி மிகுந்த ஆபரணங்களையுடையவர்கள்; நெறித்த நெற்றியர் - கோபத்தால் மேலே நெறித்த நெற்றியையுடையவர்கள்; அழல் உறு குஞ்சியர் - நெருப்புப் போன்று சிவந்து அடர்ந்த தலைமயிரை யுடையவர்கள்; அமரை வேட்டு - போரினை விரும்பி; உவந்து எழல் உறு மனத்தினர் - உற்சாகங் கொண்டு எழுகின்ற மனத்தையுடையவர்கள்; ஒருமை எய்தினார் - (தமக்குள்) ஒற்றுமை பூண்டவர்கள்; அழல் உறு - உறு; உவமவுருபு ஒருமை எய்தினார் - ஒன்று கூடினர் என்றும் போரில் ஒரே கருத்தைக் கொண்டனர் என்றும் கொள்ளலாம். நிழல் : ஒளி. 'போர் எனில் புகலும் புனைகழல் மறவர்' எனப் போர் என்றாலே விரும்புவோரும் வீரக்கழல் புனைந்தவரும் ஆகிய வீரரைப் புறநானூறு (31) குறிப்பதை இப் பாடல் நினைவுறுத்துகிறது. 43 | 2918. | மருப்பு இறா மத களிற்று அமரர் மன்னனும், விருப்புறா, முகத்து எதிர் விழிக்கின், வெந்நிடும்; உருப் பொறாது உலைவுறும் உலகம் மூன்றினும் செருப் பெறாத் தினவுறு சிகரத் தோளினார். |
இறா மருப்பு - (எளிதில்) ஒடியாத வலிய தந்தங்களையும்; மத களிற்று - மதத்தையுமுடைய ஐராவதமென்னும் யானையையுடைய; அமரர் மன்னனும் - தேவர்களுக்கு அரசனான இந்திரனும்; விருப் புறா முகத்து எதிர் விழிக்கின் - விருப்பமில்லாமல் தங்களுடைய முகத்துக்கு எதிரே விழிக்க |