பக்கம் எண் :

கரன் வதைப் படலம் 281

கோடணை முரசினம்
     குளிறு சேனையர்,
ஆடவர் உயிர் கவர்
     அலங்கல் வேலினர்,
பாடவ நிலையினர்,
     பலரும் சுற்றினர்.

    ஆடவர் உயிர் கவர் - வீரர்களின் உயிரை (உடம்பிலிருந்து)
எடுக்கவல்ல; அலங்கல் வேலினர் - வெற்றி மாலை சூடிய; பாடவ
நிலையினர் -
திறமை வாய்ந்த நிலையுடையவர்களுமாகிய; தூடணன் -
தூடணன்; திரிசிராத் தோன்றல் - திரிசிரசு என்னும் வீரன்; ஆதியர் -
முதலிய தலைவர்களை முன்னிட்டவரான; பலரும் - சேனைத் தலைவர்
பலரும்; கோடணை முரசு இனம் குளிறு சேனையர் -
ஆரவாரத்தையுடைய பேரிகை வாத்தியங்கள் முழங்குகின்ற
சேனைகளையுடையவர்களாய்; சுற்றினர் - (கரனை) வந்து சூழ்ந்தார்கள்.

     தூடணன் முதலான பெருஞ் சேனைத் தலைவர்கள் தங்கள்
சேனையோடு வந்து கரனுக்கு உதவுவதற்காகக் கரனைச் சூழ்ந்து
கொண்டார்கள் என்பது செய்தி.

     தூடணன் - யாவரையும் நிந்திப்பவன்; திரிசிரா மூன்று
தலைகளையுடையவன்; வடமொழிப் பெயர்கள். தோன்றல் - ஆண்மையில்
சிறந்தவன்; கோடணை - கோஷணம்; ஆரவாரம்; பாடவம் - திறமை;
குளிறுதல் - பேரொலி செய்தல்.                                 51

2926. ஆன்று அமை எறி
     படை அழுவத்து ஆர்கலி.
வான் தொடர் மேருவை
     வளைத்ததாம் என,
ஊன்றின தேரினன்,
     உயர்ந்த தோளினன்,
தோன்றினன் யாவரும்
     துணுக்கம் எய்தவே.

    ஆன்று அமை - நிறைந்து விளங்கிய; எறிபடை - பகைவர்களைத்
தாக்கவல்ல சேனைகளாகிய; அழுவத்து ஆர்கலி - மிக்க பரப்பையுடைய
கடல்; வான் தொடர் மேருவை - ஆகாயத்தையளாவிய மேருமலையை;
வளைத்ததாம் என - வளைத்துக் கொண்டது போல; ஊன்றின தேரினன்-
(தன்னைச் சூழ நடுவில்) நிலை நிறுத்திய தன் தேரையுடையவனும்;
உயர்ந்த தோளினன் - உயர்ந்த தோள்களையுடையவனுமாய்; யாவரும்
துணுக்கம் எய்த -
எல்லோரும் அஞ்சி நடுங்கும்படி; தோன்றினன் -
போர்க்களத்திலே (கரன்) வந்து தோன்றினான்.