பக்கம் எண் :

கரன் வதைப் படலம் 283

காடுகளெங்கும் புழுதி படிந்தன; வான் உயர் மலையின் - வானோங்கி
யுயர்ந்த மலைகளின் மேல்; கனம் துகள் பட்டன - படிந்திருந்த
மேகங்களும் அத் தூசியால் மூடப்பட்டன; கடல்கள் தூர்ந்தன -
கடல்களும் தூர்ந்துபோயின; இனி இசைப்பது என்? - இனிச் சொல்ல
வேண்டுவது என்ன உள்ளது?; ஏ - ஈற்றசை.

     சேனைகள் எழுப்பிய புழுதி வனம் முழுதும்
தூளிமயமாக்கியதுமல்லாமல் வானத்து மேகங்களையும் தூளியாக்கியது;
கடலிலும் நிரம்பித் தூர்த்தது. தொடர்புயர்வு நவிற்சியணி.

     சேனையைக் கடல் என்றது அதன் மிகுதிநோக்கி.               54

2929. நிலமிசை, விசும்பிடை,
     நெருக்கலால், நெடு
மலைமிசை மலைஇனம்
     வருவபோல், மலைத்
தலைமிசை, தலைமிசை,
     தாவிச் சென்றனர்-
கொலைமிசை நஞ்சு எனக்
     கொதிக்கும் நெஞ்சினார்.

    நிலமிசை - தரையின் மீதும்; விசும்பு இடை - ஆகாயத்தின்
மேலும்; நெருக்கலால் - (இடைவெளியில்லாமல்) நெருக்க முண்டானதால்;
கொலை மிசை நஞ்சு என - போரில் கொல்லுதலை மேற்கொண்டு
விடத்தைப் போன்று; கொதிக்கும் நெஞ்சினார் - கொதிக்கின்ற
மனமுடைய கொடிய அரக்கர்; நெடு மலைமிசை - உயர்ந்த மலைகளின்
மேல்; மலை இனம் வருவபோல் - வேறு மலைக் கூட்டங்கள் ஏறி
வருவன போல; மலைத் தலைமிசைத் தலைமிசை - மலைகளின்
சிகரங்கள் தோறும்; தாவிச் சென்றனர் - (கால் வைத்துத்) தாண்டிக்
கொண்டு சென்றார்கள்.

     பூமியிலும் வானத்திலும் சேனைகள் நெருங்கி வெற்றிடமில்லாமல்
ஆக்கியதால் பல அரக்கர்கள் மலைகளின் மேலே பாய்ந்து நடந்து
போயினர் என்பது அவர்களுக்கு மலை மேல் மலை வருவதை இல்பொருள்
உவமையாகக் கூறினார். வருவ; பெயர்.                            55

அறுசீர் ஆசிரிய விருத்தம்

2930. வந்தது சேனை வெள்ளம்,
     வள்ளியோன் மருங்கு-மாயா-
பந்த மா வினையம் மாளப்
     பற்று அறு பெற்றியோர்க்கும்
உந்த அரு நிலையது ஆகி,
     உடன் உறைந்து உயிர்கள்தம்மை
அந்தகற்கு அளிக்கும் நோய்போல்,
     அரக்கி முன் ஆக அம்மா!