மாயா - அழியாத; பந்த மா வினையம் மாள - பிணிப்பாகிய பெரிய கருமங்களையழிக்கும்படி; பற்று அறு - உலகப் பற்று நீங்கிய; பெற்றியோர்க்கும் - உயர்ந்த ஞானியர்களுக்கும்; உந்த அரு நிலையது ஆகி - விலக்க முடியாத நிலையுடையதாய்; உடன் உறைந்து - உடம்போடு பொருந்தியிருந்து; உயிர்கள் தம்மை - எல்லா உயிர்களையும்; அந்தகற்கு அளிக்கும் - யமனுக்குக் கொடுக்கின்ற (கொன்றொழிக்கின்ற) ; நோய் போல் - வியாதி போல; அரக்கி முன்னாக - அரக்கியான சூர்ப்பணகை முன்னே செல்ல; சேனை வெள்ளம் - அந்த இராக்கதச் சேனைப் பெருக்கு; வள்ளியோன் மருங்கு - வள்ளலாகிய இராமபிரான் அருகே; வந்தது - வந்து சேர்ந்தது. அம்மா; ஈற்றசை, வியப்பிடைச் சொல்லும் ஆம். சூர்ப்பணகை, தன்னோடு பிறந்த கரன் முதலிய அரக்கர்களுக்கும் இது காரணமாக இராவணன் முதலோர்க்கும் அழிவுக்குக் காரணமாய் இருந்தாளாதலால் அவளுக்கு உயிர்களை யமனுக்கு அளிக்கும் நோய் உவமையாயிற்று. அரக்கர்கள் உயிர்களுக்கும், சூர்ப்பணகை நோய்க்கும், இராமபிரான் யமனுக்கும் உவமைகள். பந்தமா வினை - உயிரைக் கட்டுப்படுத்தும் பெரிய கருமம். 56 | 2931. | தூரியக் குரலின், வானின் முகிற் கணம் துணுக்கம்கொள்ள; வார் சிலை ஒலியின், அஞ்சி, உரும் எலாம், மறுக்கம்கொள்ள; ஆர்கலி, ஆர்ப்பின், உட்கி அசைவுற; அரக்கர் சேனை, போர் வனத்து இருந்த வீரர் உறைவிடம் புக்கது அன்றே. |
தூரியக் குரலின் - வாத்தியங்களின் முழக்கத்தால்; வானின் முகிற் கணம் - ஆகாயத்திலுள்ள மேகக் கூட்டங்கள்; துணுக்கம் கொள்ள - அஞ்சி நடுக்கம் அடையவும்; வார்சிலை ஒலியின் - நீண்ட விற்களின் நாணொலியால்; உரும் எலாம் அஞ்சி - இடிகளெல்லாம் பயந்து; மறுக்கம் கொள்ள - கலக்கமடையவும்; ஆர்ப்பின் - (கர்ச்சனை முதலிய) ஆரவாரத்தால்; ஆர்கலி உட்கி அசைவு உற - கடல்களும் அஞ்சி நடுக்கமுறவும்; அரக்கர்சேனை - இராக்கதச் சேனை; அன்றே - அப்பொழுதே; _ வனத்து இருந்த போர் வீரர் உறைவிடம் - அந்தக் காட்டில் தங்கியிருந்த போரில் வல்ல வீரர்களான (இராமலக்குவர்) வசிக்கும் இடத்தை; புக்கது - போய் அடைந்தது. |