பக்கம் எண் :

கரன் வதைப் படலம் 285

     தூரியங்களாகிய வாத்தியங்களின் ஒலியும் சிலையின் நாணொலியும்
மிகுந்து தோன்ற அரக்கச் சேனை ஆரவாரம் செய்து கொண்டு
இராமலக்குவர் இருந்த இடத்தைச் சென்றடைந்தது என்பது, - தொடர்புயர்வு
நவிற்சியணி. அன்று, ஏ - அசையுமாம்.

     சேனை முழக்கத்திற்கு மேகம், கடல் இவற்றின் முழக்கங்கள்
உவமையாம்.                                                 57

2932.வாய் புலர்ந்து அழிந்த மெய்யின்
     வருத்தத்த, வழியில் யாண்டும்
ஓய்வில, நிமிர்ந்து வீங்கும்
     உயிர்ப்பின, உலைந்த கண்ண,
தீயவர் சேனை வந்து சேர்ந்தமை
     தெரிய, சென்று,
வேய் தெரிந்து உரைப்ப போன்ற-
     புள்ளொடு விலங்கும் அம்மா!

    புள்ளொடு விலங்கும் - அந்த வனத்திலுள்ள பறவைகளும்
மிருகங்களும்; வாய் புலர்ந்து அழிந்த - (அச் சேனையைக் கண்டு
அஞ்சியதால்) வாய் உலர்ந்து மனநிலை கெட்டனவும்; மெய்யின்
வருத்தத்த -
உடம்பில் வருத்தம் உடையனவும்; வழியில் யாண்டும் ஓய்வு
இல -
இடை வழியில் எங்கும் தங்கி இளைப்பாறாதனவும்; நிமிர்ந்து
வீங்கும் உயிர்ப்பின -
அண்ணாந்து பார்த்துப் பெருமூச்சு விடுவனவும்;
உலைந்த கண்ண - பார்வை மழுங்கிய கண்களையுடையனவுமாகி; தீயவர்
சேனை வந்து சேர்ந்தமை -
(ஓடிவந்து) கொடிய அந்த அரக்கர் சேனை
வந்து சேர்ந்த செய்தியை; தெரிந்து - தாம் அறிந்து, சென்று தெரிய
உரைப்ப -
முன் வந்து இராமலக்குவர் அறியும் படி செய்தி கூறுபவரான;
வேய் போன்ற - ஒற்றர்களை ஒத்தன.

     அம்மா - ஈற்றசை; வியப்பிடைச் சொல்லுமாம். பறவைகளும்
மிருகங்களும் மிகவும் அஞ்சி நிலைகெட்டுத் தரிப்பின்றி அரக்கர் சேனை
வருவதற்கு முன்பே இராமபிரான் வீற்றிருந்த பர்ணசாலையை நோக்கி
விரைந்தோடி வந்தன, அரக்கர் சேனை வருவதையறிவதற்குக்
காரணமாயிற்று என்பது. அந்தப் பறவை விலங்குகளை வந்து செய்தி கூறும்
ஒற்றர் போன்றன என்றார். தன்மைத் தற்குறிப்பேற்றவணி.             58

2933.தூளியின் படலை வந்து
     தொடர்வுற, மரமும் தூறும்
தாள் இடை ஒடியும் ஓசை
     'சடசட' ஒலிப்ப, கானத்து
ஆளியும் அரியும் அஞ்சி
     இரிதரும் அமலை நோக்கி,