விழுவதும், திசைகள் தீப் பற்றி எரிவதும், மாலைகள் துர்நாற்றம் வீசுவதும் தீ நிமித்தங்களாம். ஒடியுமால் மருப்பு - 'ஆல்' அசையுமாகும். 72 | 2947. | 'இனைய ஆதலின், "மானிடன் ஒருவன்" என்று, இவனை நினையலாவது ஒன்று அன்று அது;- -நீதியோய்!-நின்ற வினை எலாம் செய்து வெல்லல் ஆம் தன்மையன் அல்லன்; புனையும் வாகையாய்! பொறுத்தி, என் உரை' எனப் புகன்றான். |
'இனைய ஆதலின் - இத்தகைய தீ நிமித்தங்கள் நிகழ்வனவாதலால்; இவனை மானிடன் ஒருவன் என்று - இவனை ஒரு (எளிய) மனிதனென்று; நினையல் ஆவது - துச்சமாக நினைப்பது; அது ஒன்று அன்று - பொருந்துவது ஆகாது; நீதியோய் - நீதியையுணர்ந்தவனே!; நின்ற வினை எலாம் செய்து - (நீ) போருக்குரிய தொழில்கள் எல்லாவற்றையும் செய்தாலும்; வெல்லல் ஆம் தன்மையன் அல்லன் - வெல்லக் கூடிய (அவ்வளவு) எளிமையுடையவனாக (அவன்) இல்லை; புனையும் வாகையாய் - வெற்றி மாலையுடையவனே; என் உரை பொறுத்தி' - (நான் கூறிய) என்னுடைய இந்த வார்த்தைகளைப் பொறுத்துக் கொள்வாய்; எனப் புகன்றான் - என்று (அகம்பன்) சொன்னான். இப்பொழுது நிகழ்ந்துள்ள தீநிமித்தங்களைப் பார்த்தால், நீ அரக்கர்களை அணிவகுத்துப் பெரும் போர் செய்தாலும் வெல்ல முடியாதவன் இராமனென்று தோன்றுகிறதென அகம்பன் கரனுக்கு எச்சரிக்கை செய்தான் என்பது. 73 அறிவுரையைக் கரன் புறக்கணிக்க, படைகள் போர்மேல் செல்லுதல் | 2948. | உரைத்த வாசகம் கேட்டலும், உலகு எலாம் உலையச் சிரித்து, 'நன்று நம் சேவகம்! தேவரைத் தேய அரைத்த அம்மி ஆம் அலங்கு எழில் தோள், அமர் வேண்டி இரைத்து வீங்குவ, மானிடற்கு எளியவோ?' என்றான்.' |
உரைத்த வாசகம் கேட்டலும் - (இவ்வாறு) அகம்பன் கூறிய வார்த்தைகளைக் கேட்டவுடன்; உலகு எலாம் உலையச் சிரித்து - (கரன்) |