| | திரு இல் மார்பகம் திறந்தன; துறந்தன சிரங்கள். |
சுடு சரம் - (இராமபிரான்) ஏவிய கொடிய பாணங்கள்; கருவி மாவொடு - கல்லணை பூண்ட குதிரைகளையும்; கார் மதக் கைம் மலைக் கணத்து - கரிய நிறத்தையும், மதத்தையுமுடைய மலை போன்ற யானைக் கூட்டங்களையும்; ஊடு உருவி மாதிரத்து ஓடின - ஊடுருவி அப்பாலே சென்று திசைகள் எங்கும் விரைந்து சென்றன; உதிரம் அருவி மாலையின் தேங்கினது - இரத்தம் அருவிகளின் ஒழுங்குபோலத் தேங்கி நின்றது; அவனியில் அரக்கர் - பூமியிலே அரக்கர்களின்; திரு இல் மார்பகம் திறந்தன - பொலிவற்ற மார்பிடங்கள் பிளவுபட்டன; சிரங்கள் துறந்தன - தலைகள் துணிக்கப்பட்டு (உடலைவிட்டு) நீங்கின; அந்தப் போரில் இராமனின் கொடிய அம்புகள் குதிரைகளையும், யானைகளையும் ஊடுருவித் திசைகளெங்கும் ஓட, பூமியிலே அரக்கர்களின், மார்பகங்கள் பிளக்கப் படத் தலைகள் துண்டிக்கப்பட்டன; அப்போது உதிரம் அருவியொழுங்கு போல அம்பு பட்ட மிருகங்களின் உடலிலிருந்து பெருகியது என்பது கருவி : குதிரையின் மேலிருக்கை, தவிசு கல்லணை (குதிரைச்சேணம்). மாவொடு, கணத்தொடு - உருபுமயக்கம். திருவின் மார்பகம் என எடுத்து -வீரத்திருமகளையுடைய மார்பு என்றும், திரு வில் என எடுத்து - மேலானஒளியையுடைய என்றும் உரைக்கலாம்; மேலும், திரு இல் மார்பகம்- அரக்கர்களின் வெற்றித் திரு இல்லாத மார்பகம் எனலும் ஆம். 79 | 2954. | ஒன்று, பத்து, நூறு, ஆயிரம், கோடி, என்று உணரா துன்று பத்திய, இராகவன் சுடு சரம் துரப்ப, சென்று, பத்திரத் தலையின மலை திரண்டென்ன, கொன்று, பத்தியில் குவித்தன பிணப் பெருங் குன்றம். |
ஒன்று பத்து நூறு ஆயிரம் கோடி என்று உணரா - ஒன்று, பத்து, நூறு, ஆயிரம், இலக்கம், கோடி என்று கணக்கிட்டு அறிய முடியாதபடி; துன்று பத்திய - நெருங்கின வரிசையாகவுள்ள; சுடு சரம் - நெருப்புப் போன்ற கொடிய அம்புகளை; இராகவன் துரப்ப - இரகு குலத்தில் தோன்றிய இராமன் செலுத்த; சென்று - (அந்த அம்புகள்) பகைவர் மேல் சென்று; கொன்று - அவ்வரக்கர்களைக் கொன்று; பத்திரத் தலையின மலை - அம்புகளைத் தலையிற் கொண்ட பல மலைகள்; திரண்டு என்ன- திரண்டு கிடந்தன போல; பிணப் பெருங் குன்றம் - பெரிய பிணக் குவியல்களை; பத்தியில் குவித்தன - வரிசையாகக் குவிந்து கிடக்கச் செய்தன. |