மருள் தரும் - மாயையைச் செய்கின்ற; களி வஞ்சனை - களிப்பும் வஞ்சனையுமுள்ள; வளை எயிற்று அரக்கர் - வளைந்த கோரமான பற்களையுடைய இராக்கதர்களின்; கருடன் அஞ்சுறு கண்மணி - கருடனும் காண அஞ்சும்படியான கண்களின் கருவிழிகளை; காகமும் கவர்ந்த - (இப்பொழுது) காக்கைகளும் பறித்தெடுத்தன; இருள் தரும் புரத்து இழுதையர் - இருளைப் போன்ற மிகக் கரிய உடம்பையுடைய வஞ்சகர்களிடம்; பழுது உரைக்கு - கேடு சொல்வதற்கு; எளிதோ - எளியது ஆகுமோ; அருள் தரும் திறத்து - கருணை செய்யும் தன்மையையுடைய; அறன் அன்றி - தருமமேயல்லாமல்; வலியது - வலிமையுடையது; உண்டாமோ - (உலகத்தில் வேறு) உள்ளதாகுமோ? உயிர்களுக்குத் தருமத்தினும் மிக்க நன்மை தருவதும், அதருமத்தினும் மிக்க கேடு தருவதும் வேறு இல்லையாதலால் கொடியவரான அரக்கர் எளிதாக அழிவடைந்தனர் என்பது. 'அருள் தரும் திறத்து அறனன்றி வலியது உண்டாமோ' - இராமபிரானே வெற்றி பெற்றமையைத் தெரிவிப்பது : பிறிது மொழிதலணி. 'இருள் தரும் புரத்து இழுதையர் பழுது உரைக்கு எளிதோ' - வேற்றுப் பொருள் வைப்பணி. காகமும் - உம் : இழிவு சிறப்பும்மை. அறத்துக்கு அருள் மிக இன்றியமையாததால் 'அருள் தரும் திறத்து அறன்' எனப்பட்டது. 88 கலிவிருத்தம் | 2963. | பல் ஆயிரம்இருள் கீறிய பகலோன் என ஒளிரும் வில்லாளனை முனியா, வெயில் அயில் ஆம் என விழியா,- கல் ஆர் மழை, கண மா முகில் கடைநாள், விழுவனபோல்,- எல்லாம் ஒரு தொடையா உடன் எய்தார்; வினை செய்தார். |
(இவ்வாறு அரக்கரையழித்து) பல் ஆயிரம் இருள் - மிகப் பலவாகிய இருளின் தொகுதியை; கீறிய பகலோன் என ஒளிரும் - பிளந்து அழித்த சூரியனைப் போல ஒளி வீசுகின்ற; வில்லாளனை - வில்லில் வல்லவனான இராமபிரானை; (மற்றும் பல அரக்கர்); முனியா - கோபித்து; வெயில் அயில் ஆம் என விழியா - ஒளியையுடைய வேலைப் போலக் கூர்மையாகக் கண் விழித்துப் பார்த்து; கண மா முகில்- கூட்டமாகிய பெரிய மேகங்கள்; கடை நாள் - யுக முடிவுக் காலத்தில்; கல் ஆர் மழை - கற்களைப் போன்ற மழை; விழுவன போல் - சொரிவது போலத் தோன்றுமாறு; எல்லாம் ஒரு தொடையா - எல்லா வகை அம்புகளையும் ஒரே தொடர்ச்சியாக; உடன் எய்தார் - சேர்த்து எய்து; வினை செய்தார் - போர்த் தொழிலைச் செய்தார்கள். |