பொது முகத்தின் அருள்நோக்கம் இறங்காத தாமரைக்கண் எம்பெருமாஅன் - நடுநிலையில் நின்று அருட்பார்வை நீங்காத செந்தாமரை போன்ற கண்ணுடைய எங்கள் பெருமானே!; புறம் காண அகம் காண - ஒவ்வொரு பொருளின் உள்ளும் புறமும் கண்டு (வியாபித்து); அறம் காத்தற்கு - தருமத்தைப் பாதுகாத்தற்கு; உனக்கு ஒருவர் ஆரும் ஒருதுணை இன்றி - உனக்கு வேறு ஒருவர் எவரும் ஒரு சிறு துணையும் செய்யாமல், கறங்கு ஆகும் எனத் திரிய - காற்றாடி போலச் சுற்றித் திரிவதற்கு; நீயேயோ கடவாய்தான் - நீ தானோகடமைப்பட்டாய், இயம்புதி - எனக்குக் கூறுவாய். ஆல் - அசை. பரம்பொருள் எல்லாப் பொருள்களிலும் பரவிநின்று அறங்காத்து அருள்புரிவதை இப்பாடல்விளக்கும். இறங்காத - முன் பின் தாழாத. அறங்காக்கக் காற்றாடி போல் திரிந்த நிலையை முன்யானை காத்த நிகழ்ச்சியில் காணலாம். துணையின்றி அறங்காப்பதால் ‘தருமத்தின் தனி மூர்த்தி’ ஆவான் (2568). புறமாகிய ஊனக் கண்ணாலும் அகமாகிய ஞானக் கண்ணாலும் காண - எனவும்உரைப்பர். எம்பெருமாஅன் - அண்மைவிளி அளபெடுத்துவந்தது. 49 | 2566. | துறப்பதே தொழிலாகத் தோன்றினோர் தோன்றியக்கால் மறப்பரோ தம்மை அது அன்றாகில், மற்று அவர் போல் பிறப்பரோ? எவர்க்கும் தாம் பெற்ற பதம் பெறல் அரிதோ! இறப்பதே, பிறப்பதே எனும் விளையாட்டு இனிது உகந்தோய்! |
இறப்பதே பிறப்பதே எனும் விளையாட்டு இனிது உகந்தோய் - இறத்தல் பிறத்தல் என்று கூறும் திருவிளையாட்டில் நன்கு மகிழ்ந்து ஈடுபட்டவனே!; துறப்பதேதொழிலாகத் தோன்றினோர் தோன்றியக்கால்- உலகப்பற்றை நீக்குதலையே தம் செயலாகக்கொண்ட ஞானியர் ஒரு கால் பிறந்தால்; தம்மை மறப்பரோ - தம் இயல்பைமறப்பார்களோ (மாட்டார்கள்); அது அன்றாகில் - அது அவ்வாறு அல்லாவிடில்; மற்று அவர் போல் பிறப்பரோ - அவர் பிறர் போல் பிறப்பு எடுப்பாரோ (மாட்டார்); எவர்க்கும் தாம் பெற்ற பதம் பெறல் அரிதோ - அவ்வாறு துறந்தவர்க்கும் அவர்கள் அடைந்தநற்பேறு பெறுதல் அரிதே ஆகும். விளையாட்டு, மிகுந்த முயற்சி இல்லாமல் எளிதில் செய்வது - மாய விளையாட்டு என்பார்பின்னரும் (2569). இறப்பதும் பிறப்பதும் செய்யும் ‘மானிட வடிவில் வந்து அவதாரம் செய்தனன்’என்பர் சிலர். பரமபதத்தை அடைதல் துறவியர்க்கு மட்டுமின்றி இறைவன் பதம் அடைந்தவர்க்கும்எளிது என்பதாம். இறப்பதே, பிறப்பதே-எண்ணுப் பொருளில் வந்தஏகாரங்கள். 50 |