கலிவிருத்தம் | 2977. | படைப் பெருந் தலைவரும், படைத்த தேர்களும், உடைத் தடம் படைகளும், ஒழிய, உற்று எதிர் விடைத்து அடர்ந்து எதிர்ந்தவர், வீரன் வாளியால், முடைத்த வெங் குருதியின் கடலில் மூழ்கினார். |
படைப் பெருந் தலைவரும் - பெரிய சேனைத் தலைவர் பதினால் வரும்; படைத்த தேர்களும் - (அவர்கள்) பெற்றிருந்த இரதங்களும்; உடைத் தடம் படைகளும் - அவர்கள் தாங்கிய பெரிய போர்க் கருவிகளும்; ஒழிய - நீங்கலாக; எதிர் உற்று - (இராமபிரானுக்கு) எதிரில் வந்து; விடைத்து அடர்ந்து எதிர்ந்தவர் - கோபங் கொண்டு நெருங்கித் தாக்கியெதிர்த்த அரக்கர்கள் எல்லோரும்; வீரன் வாளியால் - இராமனுடைய அம்புகளால்; முடைத்த - துர்நாற்றம் மிகுந்த; வெங் குருதியின் கடலில் - கொடிய இரத்தக் கடலிலே; மூழ்கினார் - முழுகி இறந்தார்கள். இராமனை எதிர்த்த அரக்கர்களுள் சேனைத் தலைவர் பதினால்வர் தவிர மற்றவர் யாவரும் அழிந்தமையை இதில் கூறினார். முடைத்த - குறிப்புப் பெயரெச்சம். 103 | 2978. | சுற்றுற நோக்கினர், தொடர்ந்த சேனையில் 'அற்றில தலை' எனும், ஆக்கை கண்டிலர்; தெற்றினர் எயிறுகள்; திருகினார் சினம்; முற்றினர் இராமனை, முடுகு தேரினார். |
(படைத் தலைவர் பதினால்வரும்) சுற்றுற நோக்கினர் - (தம்மைச்) சுற்றிலும் எல்லாப் பக்கங்களிலும் பார்த்து; தொடர்ந்த சேனையில் - தம்மைத் தொடந்து வந்த சேனைகளில்; தலை அற்றில எனும் ஆக்கை - தலை அறாதவையென்று சொல்லக் கூடிய அரக்கரின் உடம்புகளை; கண்டிலர் - (ஒன்றேனும்) காணாதவராகி; எயிறுகள் தெற்றினர் - பற்களைக் கடித்துக் கொண்டனர்; சினம் திருகினார் - கோபம் மூண்டு; முடுகு தேரினார் - |