விரைந்து செல்லும் தேர்களையுடையவர்களாய்; இராமனை முற்றினர் - இராமபிரானைச் சூழ்ந்து கொண்டனர். சேனையிலிருந்த குதிரைகள், யானைகள் உட்பட யாவும் தலையறு பட்டமை விளங்கும். சினம் திருகுதல் - கோபத்தால் முறுக்கேறுதல். பற்களைக் கடித்தல் கோபத்தால் உண்டாகும் மெய்ப்பாடுகளுள் ஒன்று. 104 | 2979. | ஏழ்-இரு தேரும் வந்து, இமைப்பின் முன்பு, இடை சூழ்வன, கணைகளின் துணிய நூறினான்; ஆழியும், புரவியும், ஆளும் அற்று, அவை ஊழி வெங் கால் எறி ஓங்கல் ஒத்தவே. |
வந்து இடை சூழ்வன - வந்து பக்கத்திலே சூழ்ந்தவையான; ஏழ் இரு தேரும் - பதினான்கு தேர்களையும்; இமைப்பின் முன்பு - கண்ணிமைக்கும் நேரத்தில்; கணைகளின் - அம்புகளால்; துணிய நூறினான் - துண்டாகும்படி (இராமன்) அழித்தான் (அப்பொழுது); ஆழியும் புரவியும் - தேர்ச் சக்கரங்களும் குதிரைகளும்; ஆளும் அற்று - தேர்ச் சாரதிகளும் ஒழிந்து; அவை ஊழி வெம்கால் - அவை கொடிய ஊழிக் காற்றால்; எறி ஓங்கல் ஒத்த - எடுத்தெறியப்படுகின்ற மலைகளைப் போன்றன; ஏ - ஈற்றசை. ஊழிக் காற்று - இராமனுடைய அம்புக்கும், மலைகள் - வலிய பெரிய சக்கரம் பூண்ட தேர் முதலியவற்றுக்கும் உவமை. 105 | 2980. | அழிந்தன தேர்; அவர், அவனி கீண்டு உக, இழிந்தனர்; வரி சிலை எடுத்த கையினர்; ஒழிந்திலர்; சரங்களை உருமின் ஏறு எனப் பொழிந்தனர், பொழி கனல் பொடிக்கும் கண்ணினார். |
அழிந்தன தேர் - (இவ்வாறு) தேர்கள் அழிந்தன; அவர் - (அழிந்து போகவே) அந்தப் படைத் தலைவர் பதினான்கு பேரும்; அவனி கீண்டு உக - பூமி பிளந்துவிடும்படி; இழிந்தனர் - கீழே இறங்கினர்; வரிசிலை எடுத்த கையினர் - கட்டமைந்த வில்லேந்திய கையையுடையவர்களும்; ஒழிந்திலர் - |