பக்கம் எண் :

324ஆரணிய காண்டம்

     ஒப்பு : 'அடுசிலைப் பகழி தொடுத்து விடப் புகுமளவினில் அயலெதிர்
விட்டவர் வெட்டின உடல் சில இரு துணிபட்டன பட்ட பின் ஒரு துணி
கருதும் இலக்கை யழிக்குமே' (க. பரணி 421)                      118

2993.கேடகத் தடக் கைய,
     கிரியின் தோற்றத்த,
ஆடகக் கவசத்த,
     கவந்தம் ஆடுவ-
பாடகத்து அரம்பையர்
     மருள, பல்வித
நாடகத் தொழிலினை
     நடிப்ப ஒத்தவே.

    கேடகத் தடக் கைய - கேடகம் என்னும் படைக் கருவியையேந்திய
பெரிய கையையுடையனவும்; கிரியின் தோற்றத்த - மலை போன்ற
வடிவையுடையனவும்; ஆடகக் கவசத்த - பொன்னாலாகிய
கவசங்களையுடையனவுமாகிய; கவந்தம் ஆடுவ - தலையற்ற உடற்
குறைகள் துடித்துத் துள்ளுவன; பாடகத்து அரம்பையர் மருள -
பாடகமாகிய காலணியையணிந்த தேவமாதர்கள் மயங்கும்படி; பல்வித
நாடகத் தொழிலினை -
பல வகைப்பட்ட நடனத் தொழில்களை; நடிப்ப
ஒத்த -
நடித்துக் காட்டுவன போன்றன.

     தலை அறுபட்ட வீரர்களின் உடற்குறைகள், ஆடல் வல்ல
தேவமாதர்களும் கண்டு வியக்கும்படி, பலவாறு விசித்திரமாகக் கூத்தாடின
என்பது.

     அரம்பையர் என்பது இங்கே பொதுவாகத் தேவ மகளிரைக் குறிக்கும்.
பாடகம் - ஒரு வகைக் காலணி.                                119

2994. கவரி வெண் குடை எனும்
     நுரைய; கைம்மலைச்
சுவரன; கவந்தம் ஆழ்
     சுழிய; தண் துறை
பவர் இனப்படு மணி
     குவிக்கும் பண்ணைய;
உவரியைப் புதுக்கின-
     உதிர-ஆறுஅரோ.

    உதிர ஆறு - (போர்க் களத்தில் பெருகியோடிய) இரத்த ஆறுகள்;
கவரி வெண்குடை - வெண் சாமரங்களும் வெண் குடைகளும்; எனும்
நுரைய -
என்கின்ற நுரைகளைக் கொண்டன; கைம் மலைச் சுவரன -
இறந்த யானைகளாகிய பக்கச் சுவர்களையுடையனவாயின; கவந்தம் ஆழ்
சுழிய -
குறையுடல்கள் ஆழத்தக்க சுழிகளையுடையன; தண் துறை -
குளிர்ந்த நீர்த் துறைகளிலே; பவர் இனப் படு மணி குவிக்கும் -
நெருங்கிய