| 2996. | ஆய் வளை மகளிரொடு அமரர் ஈட்டத்தர்,- தூய வெங் கடுங் கணை துணித்த தங்கள் தோள், பேய் ஒருதலை கொள, பிணங்கி, வாய்விடா நாய் ஒருதலை கொள- நகையுற்றார், சிலர். |
சிலர் - சில அரக்கர்கள்; அமரர் ஈட்டத்தர் - போரில் இறந்து தேவர் கூட்டத்தில் சேர்ந்தவர்களாய்; ஆய் வளை மகளிரொடு - சிறந்த வளையல்களையுடைய தேவமாதர்களுடன்; தூய வெங் கடுங் கணை துணித்த - தூய்மையான மிகக் கொடிய இராம பாணங்களால் துண்டிக்கப்பட்ட; தங்கள் தோள் - தம்முடைய தோள்களை; பேய் ஒருதலை கொள - ஒரு பக்கம் பேய்கள் பற்றிக் கொள்ள; பிணங்கி - (அவற்றோடு) மாறுபட்டு; வாய்விடா நாய் ஒரு தலை கொள - வாயால் பற்றியதை விடாத நாய்கள் மற்றொரு பக்கத்திலே கவ்விக் கொள்ளக் (கண்டு); நகையுற்றார் - வேடிக்கையாகப் பார்த்துச் சிரித்தார்கள். ஆய்வளை - வளைகள் பலவற்றுள் தெரிந்தெடுத்த வளை; ஆய்தல் - தேர்ந்தெடுத்தல். 122 | 2997. | தெரி கணை மூழ்கலின் திறந்த மார்பினர், இரு வினை கடந்து போய் உம்பர் எய்தினார், 'நிருதர்தம் பெரும் படை நெடிது; நின்றவன் ஒருவன்' என்று, உள்ளத்தின் உலைவுற்றார், சிலர். |
தெரி கணை மூழ்கலின் - இராமனால் தேர்ந்தெடுக்கப்பட்ட அம்புகள் தைத்துப் பாய்தலால்; திறந்த மார்பினர் சிலர் - பிளக்கப்பட்ட மார்புகளையுடைய சில அரக்கர்கள்; இருவினை கடந்து போய் - தம்முடைய நல்வினை தீவினை மாய; உம்பர் எய்தினார் - மேலுலகம் அடைந்த சில அரக்கர்கள்; 'நிருதர் தம் பெரும்படை நெடிது - அரக்கர்களுடைய பெரிய சேனையோ மிக நீண்டது; நின்றவன் - (இவர்களை எதிர்த்து) நின்ற இராமபிரானோ; ஒருவன்' என்று - துணையற்ற |