| | தோற்றிய வில்லொடும் தொடர, மீமிசைக் காற்று இடை அழித்தென, கார் முகத்தையும் மாற்ற அரும்பகழியால், அறுத்து மாற்றினான். |
ஏற்றிய நுதலினன் - (கோபத்தால்) நெறித்து நெற்றியின் மேல் ஏற்றிய புருவத்தையுடைய இராமபிரான்; இருண்ட கார் மழை தோற்றிய வில்லொடும் - இருண்ட கார்காலத்து மேகம் மழையை உண்டாக்குகின்றது போல விளங்கிய தன் வில்லுடன்; தொடர - விடாது நெருங்கிப் போர் செய்ய; மீ மிசைக் காற்று இடை அழித்தென - வானத்தின் மேல் அடிக்கின்ற காற்று (மேகத்தை) இடையிலே புகுந்து சிதறியழித்தது போல (அழியுமாறு); கார்முகத்தையும் - திரிசிரனது வில்லையும்; மாற்ற அருபகழியால் அறுத்து மாற்றினான் - யாராலும் விலக்க இயலாத தன் பாணங்களால் வெட்டி யெறிந்தான். பின்னும் திரிசிரா தொடர்ந்து போர் செய்ய, இராமபிரான் அவனது வில்லையறுத்தெறிந்தான் என்பது. ஏற்றின நுதல் : நெற்றி நுதல் மேல் ஏறுதல் வீரத்தில் தோன்றும் மெய்ப்பாடுகளில் ஒன்று. முந்தின பாடலில் 'திரிசிரா' 'கார் இழிந்தாலெனக் கணைகள் சிந்தினான்' என்று கூறி இச் செய்யுளில் இராமபிரான், 'கார் மழை தோற்றிய வில்லொடும் தொடர்ந்தான்' என்று இரண்டிடத்தும் ஒரே உவமையையே அமைத்தது நயம். சரங்களுக்கு மழையும், பகழிக்குக் காற்றும் உவமைகளாம். 'ஏற்றிய நுதலினன்' என்ற தொடரைத் திரிசிரனுக்கு ஆக்கி உரை செய்வாரும் உளர். 132 கலிநிலைத் துறை | 3007. | வில் இழந்தனன் என்னினும், விழித்த வாள் முகத்தின் எல் இழந்திலன்; இழந்திலன் வெங் கதம்; இடிக்கும் சொல் இழந்திலன்; தோள் வலி இழந்திலன்; சொரியும் கல் இழந்திலன்; இழந்திலன் கறங்கு எனத் திரிதல். |
வில் இழந்தனன் என்னினும் - (அத் திரிசிரன்) வில்லையிழந்து விட்டானென்றாலும்; விழித்த வாள் முகத்தின் எல் இழந்திலன் - உறுத்துப் பார்க்கின்ற ஒளிமிக்க தனது முகத்தின் ஒளியை இழந்துவிடவில்லை; வெம் கதம் இழந்திலன் - கொடிய கோபத்தை இழந்தானில்லை; இடிக்கும் சொல் இழந்திலன் - இடி முழக்கம் போலப் பேசும் வீர வார்த்தைகளை |