| | பொற்றை மா முழைப் புலாலுடை வாயினின், புகுந்து பற்ற ஆதரிப்பான்தனை நோக்கினன்; பரிவான், கொற்ற வார் சரத்து, ஒழிந்தது ஓர் சிரத்தையும் குறைத்தான். |
அற்ற தாளொடு தோளிலன் - கால்களும் கைகளும் அறுபட்டவனாகி; அயில் எயிறு இலங்க - (அதற்குப் பின்பும்) தன் கூரிய பற்கள் தோன்றுமாறு; பொற்றை மா முழைப் புலால் உடை வாயினின் - மலையின் பெரிய குகை போன்ற புலால் நாற்றம் வீசும் தன் வாயினால்; புகுந்து பற்ற ஆதரிப்பான்தனை - (தன் மேல்) விழுந்து தனை (இராமனைப்) பற்றி விழுங்க விருப்பமுற்ற அத் திரிசிரனை; நோக்கினன் - பார்த்து (இராமன்); பரிவான் - (அவன்மேல்) இரக்கங் கொண்டவனாய்; கொற்ற வார் சரத்து - வெற்றி தரும் தனது நீண்ட அம்பினால்; ஒழிந்தது ஓர் சிரத்தையும் குறைத்தான் - அறுக்கப்படாது எஞ்சியிருந்த ஒரு தலையையும் துணித்தான். படைக் கருவிகளையிழந்தவனாய்க் கால் கைகளாகிய முக்கிய உறுப்புக்களும் அறுபட்டு நின்ற நிலையிலும் அவனது கொடுமை நீங்காமல் இராமனை விழுங்கிவிடக் கருதியவனிடம் இராமன் இரக்கப்பட்டு அவனது எஞ்சிய சிரத்தையும் துண்டித்து வீழ்த்தினான் என்பது. பொற்றை - மலை. 135 | 3010. | திரிசிரா எனும் சிகரம் மண் சேர்தலும், செறிந்த நிருதர் ஓடினர், தூடணன் விலக்கவும் நில்லார்;- பருதி வாளினர், கேடகத் தடக் கையர், பரந்த குருதி நீரிடை, வார் கழல் கொழுங் குடர் தொடக்க. |
திரிசிரா எனும் சிகரம் - திரிசிரன் என்னும் மலைச் சிகரம்; மண் சேர்தலும் - தரையில் விழுந்ததும்; தூடணன் விலக்கவும் நில்லார் - தூடணன் என்ற சேனைத் தலைவன் (தங்களைத்) தடுக்கவும் நில்லாதவர்களாய்; பருதி வாளினர் - கதிரவனைப் போல் ஒளி வீசும் வாட்படையையுடையவர்களும்; கேடகத் தடக்கையர் - கேடகங்களைப் பிடித்த பெரிய கைகளையுடையவர்களுமாகிய; செறிந்த நிருதர் - (முன்பு) நெருங்கி நின்ற அரக்கர்கள்; வார் கழல் - நீண்ட கால்கள்; பரந்த குருதி நீரிடை - பரவிய இரத்த வெள்ளத்திலுள்ள; கொழுங் குடர் - கொழுத்த குடல்களிலே; தொடக்க - மாட்டிக் கொண்டு தடை செய்ய; ஓடினர் - ஓடினார்கள். |