போரில் எதிர்த்து நிற்க முடியாமல் மிக அஞ்சி ஓடிப் போகின்ற நிலையிலும் சிலர்க்கு அவ்வாறு விரைந்து செல்ல முடியாதபடி தற்செயலாகத் தடை நேர்கின்ற விதியின் கொடுமை ஈற்றடியில் விளங்கும். கைகளில் படைக்கலம் இருந்தும் போர்க்குத் துணியாத அவர்களது ஆற்றலின்மையைப் புலப்படுத்துவதற்கு, 'பருதி வாளினர் கேடகத் தடக்கையர்' என்ற அடைமொழி கொடுத்தார். படைக் கலங்களையும் கை, கால் முதலிய உறுப்புகளையும் இழந்த நிலையிலும் போர் துறவர் வீரனாகிய திரிசிரனின் பெருமையை (3007, 3008) படைக்கலங்கள் இருந்தும் ஓடிய அரக்கர் சிறுமையொடு ஒப்பிட்டுணர்க. 136 | 3011. | கணத்தின் மேல் நின்ற வானவர் கை புடைத்து ஆர்த்தார், பணத்தின்மேல் நிலம் குழியுற, கால் கொடு பதைப்பார், நிணத்தின்மேல் விழுந்து அழுந்தினர் சிலர்; சிலர், நிவந்த பிணத்தின்மேல் விழுந்து உருண்டனர், உயிர் கொடு பிழைப்பார். |
கணத்தின் மேல் நின்ற வானவர் - (அரக்கர்களின் கால்கள் களத்தில் கிடந்த குடல்களில் சிக்கியதைக் கண்டு) கூட்டமாக வானத்தில் திரண்டு நின்ற தேவர்கள்; கைபுடைத்து ஆர்த்தார் - மகிழ்ச்சியோடு பரிகசித்துக் கைகொட்டி யாரவாரித்தார்கள்; சிலர் - சில அரக்கர்கள்; பணத்தின் மேல் நிலம் குழி உற - (ஆதிசேடனாகிய பாம்பின்) படங்களின் மேலுள்ள பூமி குழிபடும்படி; கால் கொடு பதைப்பார் - (தங்கள்) கால்களைப் பதிய வைத்து விரைந்தோடினவர்களாய்; நிணத்தின் மேல் விழுந்து அழுந்தினர் - (அக் களத்தில் கிடந்த) கொழுப்பில் வழுக்கி விழுந்து (அந்தச் சேற்றிலே) அழுந்தினார்கள்; சிலர் - மற்றும் சிலர்; உயிர் கொடு பிழைப்பார் - உயிர் நீங்காதபடி காத்து கொண்டு பிழைத்தோட முயன்றவர்களாய்; நிவந்த பிணத்தின் மேல் விழுந்து உருண்டனர் - உயர்ந்து கிடந்த பிணங்களின்மேல் இடறி விழுந்து கீழே புரண்டார்கள். ஓடிச் செல்லும் அரக்கர்களின் உடற்பார மிகுதியையும் செல்லும் வேகத்தின் மிகுதியையும் இச் செய்யுள் விளக்குகின்றது. 'பணத்தின் மேனிலம் குலைவுறல்' - ஓடும் அரக்கரின் வேகத்தாலும் பளுவாலும் ஆகும். 137 | 3012. | வேய்ந்த வாளொடு வேல் இடை மிடைந்தன வெட்ட, ஓய்ந்துளார் சிலர்; உலந்தனர் உதிர நீர் ஆற்றில் பாய்ந்து, கால் பறித்து அழுந்தினர் சிலர்; சிலர் பயத்தால் |
|