கைகளைத் தலைமேற் கொண்டு (அந்தக் குறையுடலை) வணங்கி நிற்பார்கள். இராமனது பாணத்திற்கு அஞ்சி மலைக் குகையில் ஓடியொளிந்து உயிர் பிழைக்கக் கருதுபவர் இடையிலே பெரிய யானையின் வயிற்றில் உண்டான புண்ணாகிய துளையைக் கண்டு அந்தத் துளையே மலைக் குகையென்று மயங்கி அதனுள்ளே ஒளிந்து கொள்ளச் சென்றார்கள்; அவ்வாறு செல்கையில் அருகில் நின்ற தலையற்ற உடலைப் பார்த்து 'இராமன் எங்களைத் தேடி வந்தால் நீ எங்களைக் காணவில்லையென்று சொல்' என்று வேண்டிக் கைகூப்பி வணங்கினர் என்பது. உயர்வு நவிற்சியின் உச்சம் காண்க. 139 | 3014. | கச்சும் வாளும் தம் கால் தொடர்ந்து ஈர்வன காணார், அச்சம் என்பது ஒன்று உருவு கொண்டாலென, அழிவார்; உச்ச வீரன் கைச் சுடு சரம் நிருதர் நெஞ்சு உருவத் தச்சு நின்றன கண்டனர், அவ் வழித் தவிர்ந்தார். |
கச்சும் வாளும் - (தமது) கச்சும் (அதில் செருகப்பட்ட) உடை வாளும்; தம் கால் தொடர்ந்து ஈர்வன - (விரைந்தோடும்போது) நழுவி விழுந்து தங்கள் கால்களைச் சுற்றிக் கொண்டு அறுப்பதை; காணார் - தெரிந்து கொள்ளாதவர்களாய்; (இராமனின் அம்புகளே தம்மை அறுக்கின்றன என்று கருதி); அச்சம் என்பது ஒன்று உருவு கொண்டால் என - பயம் என்கின்ற ஒரு குணமே ஓர் உருவம் கொண்டு வந்தது போல; அழிவார் - மனமழிவார் (அந்த இடத்தில்); நிருதர் நெஞ்சு உருவத் தச்சு நின்றன - (அங்கே கிடக்கின்ற) அரக்கர்களின் மார்பு முழுவதும் துளைபடும்படி தைத்து நின்றவையான; உச்ச வீரன் கைச் சுடு சரம் - சிறந்த வீரனான இராமனது கையினால் எய்யப்பட்ட கொடிய அம்புகளை; கண்டனர் - பார்த்தவர்களாய்; அவ்வழித் தவிர்ந்தார் - அந்த வழியே (தாம் செல்லுவதை) விட்டொழித்தார்கள். 'மருண்டவன் கண்ணுக்கு இருண்ட தெல்லாம் பேய்' என்றபடி அச்சங் கொண்ட அரக்கர்களுக்குத் தம் கச்சும் வாளுமே அச்சத்திற்குக் காரணமாயின; அத்துடன் பிறர்மேல் தைத்து நின்ற அம்புகளைக் கண்டு அவை தம் உடலிலும் தைக்குமோ என்ற ஐயத்தைத் தரவே அவ்வழியே செல்லுவதையும் தவிர்த்தனர் என்பது. உச்சம் - உயர்வு; தச்சு - தைத்து என்பதன் போலி. 140 புறங்கொடுப்பவரைத் தேற்றித், தூடணன் வீரவுரை கூறல் | 3015. | அனையர் ஆகிய அரக்கரை, ' "ஆண் தொழிற்கு அமைந்த | |