அறம் கொளாதவர்-தருமத்தைக் கைக் கொள்ளாத அரக்கர்களுடைய; ஆக்கைகள் - உடல்கள்; அடுக்கிய அடுக்கல் - ஒன்றன் மேல் ஒன்றாகக் குவிந்ததனாலாகிய மலைகள்; பிறங்கி நீண்டன - உயர்ந்து நீண்டுள்ளவை; கணிப்பு இல - எண்ணிக்கை இல்லாதனவாம்; பெருங்கடு விசையால் - (ஆதலால்) மிகக் கடுமையான வேகத்தால்; கறங்கு போன்று உளது ஆயினும் - காற்றாடி போன்று உள்ளதானாலும்; அத்தேர் - தூடணன் ஏறிய அத்தேர்; பிணப் பெருங்காட்டில் - பிணக்குவியல்களாகிய காட்டிலே; இறங்கும் ஏறும் - பள்ளமான இடங்களில் இறங்கும் மேடான இடங்களில் ஏறும்; (அத்தேர்) பட்டது - உற்ற இடர்நிலையை; யாது என இசைப்பாம் - நாம் என்ன வென்று சொல்லுவோம்? (கூறவியலாது). தூடணனது தேர் எண்ணிக்கையற்ற மலை போன்ற பிணக்குவியல்களில் ஏறியிறங்குதலால் இடறி மிகத் துன்பப்பட்டது என்பது. விரைந்து செல்வதில் தேர்க்குக் காற்றாடி உவமை. 156 | 3031. | அரிதின் எய்தினன் - ஐ-ஐந்து கொய் உளைப் பரியால் உருளும் ஆழியது ஒரு தனித் தேரினன், உலகத்து இருளை நீக்கிய இந்துவின் பொலிகின்ற இராமன் தெருளும் வார் கணைக் கூற்று எதிர், ஆவி சென்றென்ன. |
(தூடணன்) கொய் உளை ஐ ஐந்து பரியால் - அழகாகக் கத்தரிக்கப்பட்ட பிடரி மயிர்களையுடைய இருபத்தைந்து குதிரைகள் பூட்டியதால்; உருளும் ஆழியது - (எளிதில்) உருளும் சக்கரங்களையுடையதான; ஒரு தனித் தேரினன் - ஒப்பற்ற தனித்த தேரையுடையவனாய்; கூற்று எதிர் - யமனுக்கு எதிரிலே; ஆவி சென்று என்ன - உயிர் வலியச் சென்றாற் போல; உலகத்து இருளை - இவ்வுலகிலுள்ள இருட்டை; நீக்கிய இந்துவின் - ஒழிக்கின்ற சந்திரன் போல; பொலிகின்ற இராமன் - விளங்குகின்ற இராமனுடைய; தெருளும் வார்கணை - தெளிவான நீண்ட அம்புக்கு எதிரில்; அரிதின் எய்தினன் - மிகுந்த சிரமப்பட்டு வந்து சேர்ந்தான். யமனுக்கு எதிரே அவனால் கவரப்படுவதற்குரிய உயிர் வந்து நின்றாற் போல இராமபிரான் கணைக்கு எதிரே இருபத்தைந்து குதிரைகள் பூட்டிய தனித் தேரையுடைய தூடணன் அரிதின் எய்தினான் என்பது. இராமனுக்குச் சந்திரன் உவமை - குளிர்ச்சி தந்து உயிர்களை மகிழ்விப்பதால். குறித்த இலக்கைத் தவறாது அழிப்பது பற்றி இராம பாணத்திற்குக் கூற்றுவன் ஒப்பாவான். இராமபாணத்தால் இவன் உடனே அழிதற்குக் காரணமாதலால் 'கூற்றெதிர் ஆவி சென்றென்ன' என்றார். |