பக்கம் எண் :

கரன் வதைப் படலம் 349

     'இருளின் நீங்கிய இந்து' - சூழ்ந்திருந்த அரக்கர் பட்டொழியத் தான்
மட்டும் நின்ற இராமபிரானுக்கு உவமையாம்.                      157

தூடணன் மாய்தல்

3032.சென்ற தேரையும், சிலையுடை
     மலை எனத் தேர்மேல்
நின்ற தூடணன்தன்னையும்
     நெடியவன் நோக்கி,
'நன்று-நன்று, நின் நிலை!'
     என, அருள், இறை நயந்தான்
என்ற காலத்து, அவ் வெய்யவன்
     பகழி மூன்று எய்தான்.

    சென்ற தேரையும் - (அவ்வாறு எதிரில்) வந்த தேரையும்; சிலை
உடை மலை என -
வில்லையேந்திய ஒரு மலை போல; தேர் மேல்
நின்ற -
அத் தேரின் மேல் (வில்லேந்தி) நின்ற; தூடணன் தன்னையும் -
தூடணனையும்; நெடியவன் நோக்கி - இராமபிரான் பார்த்து; 'நின் நிலை
நன்று நன்று' என -
'(போரில்) உனது உறுதி நிலை மிக நன்றாயிருந்தது'
என்று; இறை அருள் நயந்தான் - அவனைச் சிறிது அருளோடு
மதித்தான்; என்ற காலத்து - அவ்வாறு கூறிய அச் சமயத்தில்; அவ்
வெய்யவன் -
அந்தக் கொடியவனான தூடணன்; பகழி மூன்று எய்தான்
-
மூன்று அம்புகளைத் தொடுத்தான்.

     தேரின் மேல் வில்லேந்தியவனாகத் தூடணன் வந்து நிற்க, அவனது
தளராத வீரத்தை இராமன் பாராட்டி நிற்கையில் அத் தூடணன் இராமன்
மேல் மூன்று கணைகளை விடுத்தான் என்பது.

     சிலையுடை மலை - வில்லேந்திய தூடணனுக்கு உவமை :
இல்பொருளுவமை. நன்று நன்று - அடுக்கு உவமை பற்றியது. நெடியவன் -
எங்கும் வியாபித்த திருமாலாகிய இராமபிரான். தன் பகைவனான
தூடணனது வீரத்தைப் பாராட்டிய இராமனது சிறப்பைக் காட்டுவது இது.
இறை - சிறிது.                                              158

3033. தூர வட்ட எண் திசைகளைத்
     தனித்தனி சுமக்கும்
பார எட்டினோடு இரண்டினில்
     ஒன்று பார் புரக்கப்
பேர விட்டவன், நுதல் அணி
     ஓடையின் பிறங்கும்,
வீர பட்டத்தில் பட்டன,
     விண்ணவர் வெருவ.

    தூர - நெடுந்தூரம் நீண்ட; வட்ட - வட்டமாய் அமைந்துள்ள; எண்
திசைகளை -
எட்டுத் திக்குகளையும்; தனித்தனி சுமக்கும் - தனித்
தனியே