பக்கம் எண் :

350ஆரணிய காண்டம்

சுமக்கின்ற; பார எட்டினோடு - வலிய எட்டுத் திசை யானைகளோடு
சேர்ந்த; இரண்டினில் ஒன்று - (பூமியைச் சுமக்கின்ற மற்ற இரண்டான
ஆதிசேடன், ஆதி கூர்மம் என்ற) இரண்டனுள் ஒன்றாகிய ஆதிசேடனை;
(ஆதிசேட அம்சமான பாதுகைகளை); பார் புரக்க - உலகை ஆட்சி
செய்யுமாறு; பேர விட்டவன் - (அயோத்திக்குத்) திருப்பியனுப்பியவனான
இராமபிரானின்; நுதல் அணி - நெற்றியில் அணிந்துள்ள; ஓடையின்
பிறங்கும் -
(யானையின்) முகபடாம் போல விளங்குகின்ற; வீர பட்டத்தில்
-
வீர பட்டிகையில்; விண்ணவர் வெருவ - தேவர்களும் அஞ்சும்படி;
பட்டன - (அந்த மூன்று அம்புகளும்) தாக்கின.

     இராமபிரானது வீரபட்டிகையில் தூடணன் எய்த அம்புகள் பட்டன
என்பது. இராமனது நெற்றிப் பட்டிகைக்கு யானையின் நெற்றிப் பட்டத்தை
உவமை கூறியதால் இராமன் களிறு போன்றவன் என்பது விளங்கும். எட்டுத்
திக்குகளிலுள்ள எட்டு யானைகளும், நடுவில் ஆதி சேடனும் அதன் கீழ்
ஆதி கூர்மமுமாக இப்பத்தும் பூமிக்குக் கீழேயிருந்து அதனைத்
தாங்குகின்றன என்பது நூற் கொள்கை.

     வீரபட்டம் - வெற்றி பெற்ற வீரர் அதற்கு அறிகுறியாக
நெற்றியிலணியும் பொன்தகடு.

     எட்டு, இரண்டு - எண்ணலளவையாகு பெயர்கள்.              159

3034. 'எய்த காலமும் வலியும் நன்று'
     என நினைந்து. இராமன்,
செய்த சேயொளி முறுவலன், கடுங்
     கணை தெரிந்தான்;
நொய்தின், அங்கு அவன் நொறில்
     பரித் தேர் பட நூறி,
கையில் வெஞ் சிலை அறுத்து,
     ஒளிர் கவசமும் கடிந்தான்.

    'எய்த காலமும்' - (இந்த அரக்கன்) அம்பு எய்த காலமும் வலியும்-
அவனது வலிமையும் நன்று' என - நல்லன என்று நினைந்து -
எண்ணி; இராமன் - இராமபிரான்; சேய் ஒளி செய்த முறுவலன் -
அழகுள்ள ஒளியுடைய புன்னகை பூத்தவனாய்; கடும் கணை தெரிந்தான் -
கொடிய பாணங்களை ஆராய்ந்து தொடுத்து (அவற்றால்); அங்கு
நொய்தின் -
அங்கே விரைவிலே; அவன் - அந்த அரக்கர் படைத்
தலைவனான தூடணனது; நொறில் பரித் தேர் - விரைவாகச் செல்லும்
குதிரைகள் பூட்டிய தேரை; பட நூறி - அழியும்படி சிதைத்து; கையில்
வெம்சிலை அறுத்து -
அவன் கையிலிருந்த கொடிய வில்லையும்
துண்டித்து; ஒளிர் கவசமும் கடிந்தான் - விளங்குகின்ற அவனது
கவசத்தையும் பிளந்து அழித்தான்.