இராமன் தூடணனது செயலைப் பாராட்டியவாறு கடுங்கணைகளைத் தேர்ந்தெடுத்து எய்து அந்த அரக்கர் சேனைத் தலைவனான தூடணனது தேரையும் நிலையையும் சிதைத்துக் கவசத்தையும் அழித்தான் என்பது. சேயொளி - செம்மை ஒளி அழகைக் குறிக்கும். செய்த முறுவலன் - முறுவல் செய்தவன் : விகுதி பிரித்துக் கூட்டல். காலமும் வலியும் நன்று என்றது : படை வீரர்கள் அஞ்சியோடிய போது அஞ்சாது எதிர் சென்று அவர்களைத் தடுத்து நிறுத்திப் போர்க்கு ஏகச் செய்து, தானும் அஞ்சாது எதிர்த்துப் போர் செய்யும் அவனது போர் செய்த நேரத்தையும் வலிமையையும் பாராட்டியது. நொறில் - விரைவு குறித்த உரிச்சொல். 160 | 3035. | தேவர் ஆர்த்து எழ, முனிவர்கள் திசைதொறும் சிலம்பும் ஓவு இல் வாழ்த்து ஒலி கார்க் கடல் முழக்கு என ஓங்க, 'கா அடா இது, வல்லையேல், நீ' என, கணை ஒன்று ஏவினான்; அவன் எயிறுடை நெடுந் தலை இழந்தான். |
தேவர் ஆர்த்து எழ - தேவர்கள் மகிழ்ந்து ஆரவாரம் செய்யவும் முனிவர்கள் திசைதொறும் சிலம்பும் - முனிவர்கள் எல்லாத் திக்குகளிலும் நின்று ஆரவாரத்தோடு கூறுகின்ற; ஓவு இல் வாழ்த்து ஒலி - ஒழிவில்லாத வாழ்த்துகளின் ஓசை; கார்க் கடல் முழக்கு என ஓங்க - கரிய கடலின் முழக்கம் போல மிகுந்து விளங்கவும்; 'நீ வல்லையேல் இது கா அடா' என - 'நீ வல்லமையுள்ளவனானால் இந்த அம்பைத் தடுத்து உன்னைக் காத்துக் கொள்ளடா' என்று வீரவாதம் கூறி; கணை ஒன்று ஏவினான் - இராமபிரான் ஓர் அம்பைத் தொடுத்தான்; அவன் - அந்த அரக்கனான தூடணனும்; எயிறு உடை நெடுந்தலை இழந்தான் - கோர தந்தங்களையுடைய தன் பெரிய தலையை இழந்தான். கார்க் கடல் முழக்கு : நாற்றிசையிலும் நின்று நான்கு வேத மந்திரங்களைக் கொண்டு ஆசி கூறும் பேரொலிக்குக் கார்க் கடல் முழக்கு உவமையாம். 161 கலி விருத்தம் கரன் வெகுண்டு, பெரும்படையுடன் போருக்கு எழுதல் | 3036. | தம்பி தலை அற்ற படியும், தயரதன் சேய் அம்பு படையைத் துணிபடுத்ததும், அறிந்தான், வெம்பு படை விற் கை விசயக் கரன் வெகுண்டான்- |
|