| | கொம்பு தலை கட்டிய கொலைக் கரியொடு ஒப்பான். |
கொம்பு தலை கட்டிய - தந்தங்கள் முகத்தில் உறுதியாக விளங்குகின்ற; கொலைக் கரியோடு ஒப்பான் - கொல்லுதலில் வல்ல யானை போன்றவனான; வெம்பு படை வில் கை விசயக் கரன் - உக்கிரமான பல வகைப் படைக்கலங்களையும் வில்லையும் ஏந்திய கைகளையும், வெற்றியையுமுடைய கரன்; தம்பி தலை அற்றபடியும் - தன் தம்பியான தூடணன் (இராமனது அம்பால்) தலை அறுபட்டு அழிந்ததையும்; தயரதன் சேய் அம்பு - தசரதனின் மைந்தனான இராமனது பாணம்; படையைத் துணி படுத்ததும் - தன் அரக்கப் படைகளை வெட்டித் துண்டாடியதையும்; அறிந்தான் - அறிந்து; வெகுண்டான் - சினங் கொண்டான். இராமபிரானால் தூடணன் தலையறுபட்டதையும், அரக்கச் சேனை துண்டு பட்டதையும் அறிந்து, கரன் வெகுண்டான் என்பது. 'கொம்பு தலை கட்டிய - கரனது முகத்தில் வெளிப்பட்டுக் காணப்படுகின்ற கோர தந்தங்கள் யானைத் தந்தம் போல்வன என்பது விளங்கும். 162 | 3037. | அந்தகனும் உட்கிட, அரக்கர் கடலோடும் சிந்துரம். வயப் புரவி, தேர் திசை பரப்பி, இந்துவை வளைக்கும் எழிலிக் குலம் என, தான் வந்து, வரி விற் கை மத யானையை வளைத்தான். |
அந்தகனும் உட்கிட - (கோபங்கொண்ட கரன்) யமனும் அஞ்சும்படி; அரக்கர் கடலோடும் - இராக்கதர் படையுடனே; சிந்துரம் - யானைகளையும்; வயப் புரவி - வலிய குதிரைகளையும்; தேர் - தேர்களையும்; திசை பரப்பி - எல்லாத் திசைகளிலும் பரவியிருக்கச் செய்து; இந்துவை வளைக்கும் - சந்திரனை வளைத்துக் கொண்ட; எழிலிக் குலம் என - மேகக் கூட்டங்கள் போல; தான் வந்து - அரக்கனாகிய கரன் வந்து; வரி விற் கை மத யானையை - கட்டமைந்த வில்லையேந்திய கையையுடைய மதயானை போன்ற இராமபிரானை; வளைத்தான் - சூழ்ந்து கொண்டான். அரக்கனான கரன் நான்கு வகைச் சேனைகளையும் கொண்டு இராமபிரானை வளைத்தான் என்பது. இராமனுக்குச் சந்திரனும், அரக்கர் கூட்டத்திற்கு மேகக் கூட்டமும் உவமை. |